Announcement

Collapse
No announcement yet.

Matured mind

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Matured mind

    Courtesy:Sri.JK.Sivan


    பண்பட்ட மனம்
    காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எந்த சக்தியாலும் இந்த ஓட்டத்தை நிறுத்தமுடியாது. எனினும் எல்லாம் நிலைத்து நிற்பதுபோலவும் எதுவும் சாஸ்வதம் போலும் நாம் நம்புவது வேடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு வினாடியும் மனதில் ஒவ்வொரு எண்ணம் அலைமேல் அலையாக உள்ளே தோன்றி ஓயாமல் ஒழியாமல் சலனப்படுத்திக்கொண்டு ஆட்டுவிக்கிறது.


    என்று இதை கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்துவது?. முடியுமா நம்மால்? ஆசை பேராசையாக வளர்கிறது. ஒரு சிறு ஏமாற்றத்தைக்கூட தாங்க முடியவில்லை. அதிர்ச்சியாக ஆட்டுவிக்கிறது. மற்றவரை எப்போதும் கவனித்துக்கொண்டு அவர்கள் வளர்ச்சியையும் அவர்களது பெருமையையும் கண்டு கேட்டு "அடடா! நமக்கு இது கிடைக்கவில்லையே? நமக்கு இதுபோல் இல்லையே, அவர்களுக்கு மட்டும் கிடைத்து விட்டதே என பொறாமை நிறைய மனங்களை வாட்டுகிறதை அறிவேன். ஏன் மனம் இதற்காக ஏங்கி பொருமும் சிறுமதி ? இவர்களுக்கும் நிம்மதிக்கும் காத தூரம் எப்போதும். அசையும் குடத்தில் பால் தெளிந்து தயிராக உரையுமா?


    அவரவர் செயலும் எண்ணமும் தான் அவரவர்களை உருவாக்குகிறது. நல்லெண்ணமும் நற்கதியும் பெற நமக்குதவுவது இறைவன் சிந்தனைதான். கிடைத்ததை விரும்பி இறைவன் நமக்களித்த பெரும் பரிசாக, நம் தகுதிக்கேற்றதாக நம்முடைய உழைப்பின் ஊதியமாக நன்றியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு வந்துவிட்டால் ஒவ்வொரு கணமும் இன்பமானதாக அமையும்.


    ஒவ்வொரு வேளை கிடைக்கும் உணவுக்குப் பின்னால் அதன் உழைப்பில் இருக்கும் எண்ணற்ற காணாத முகங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறோம. காசே எல்லாவற்றையும் கிடைக்கப்பண்ணும் காமதேனுவாகுமா? எவற்றின் பின்னாலும் ஒளிந்து நிற்கும் இறைவனை நினைக்க வேண்டாமா ?


    ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பார்கள். ஏன்? அவனை ஒரு பொருட்டாக எவரும் மதிப்பதில்லை. வாழ்ந்தானா மடிந்தானா என்று அக்கறை எவருமில்லாதவன். எல்லாதவறுகளுக்கும் அவனே காரணம் என்று அவன் மீது சுமத்தினாலும் பொறுப்பவன். அவன் எதிலும் பங்குகொள்வதில்லை. எதையும் எதிர்ப்பதில்லை. எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. குற்றமும் சுற்றமும் அவனுக்கில்லை. இன்பம் துன்பம் இரண்டையும் வித்யாசமின்றி ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்பட்டுவிட்டது. அடுத்த உணவு எங்கிருந்து வரும் யார் தருவார்? என்ற எண்ணம் மடிந்துவிட்டது. கிடைத்தால் சரி. இல்லையென்றாலும் சரி. வந்ததையும் தந்ததையும் சமமாக ஏற்றுக்கொள்ள அனுபவம் கிட்டிவிட்டது. எனவே எப்போதும் ஒரே நிலையாக மனம் இருக்க தெரிந்துவிட்டது. சுகமோ சுகம்! . அவனை அறியாதவர்கள் இது எதோ ஒரு அசடு. பைத்தியம், சோம்பேறி. இத்தகைய பட்டங்களை வாரி வழங்குவார்கள். இது எதுவும் அவனை சிறிதும் பாதிக்காது. அவனுக்கு நாள், நேரம், மணி கிழமை, திதி, நக்ஷத்ரம் எதுவுமே தனியாக சிறப்பாக இல்லை. அவன் தான் ஒவ்வொரு வினாடியிலும் இன்பத்தில் ஆழ்ந்திருக்கிறானே. இரவிலும் விழித்திருப்பான். பகலிலும் விழிதிருப்பான். பேசாமல் பேசும் விழிகள் அவனுக்கு. வித்யாசமற்ற சிரிப்பு. உள்ளம் தெளிந்திருந்தால் உடலுக்கு ஒரு வலிமை கிட்டிவிடும். இயற்கையோடு இயற்கையாக அவனது வாழ்க்கை அமைந்துவிட்டதை கூட அவன் அறிந்ததாக காட்டிக் கொள்ளவில்லை.


    இப்படி எல்லாம் ஒருவன் இருக்க முடியுமா? ஏன் முடியாது. இதற்காக கோவிலில், மரத்தடியில் போய் அமர வேண்டாம். வீட்டிலேயே, இருக்கும் இடத்திலேயே கூட அனுபவிக்க முடியும். மனம் கட்டுக்குள் வந்துவிட்டால் மடம் எதற்கு? நாக்கு கட்டுக்குள் வந்துவிட்டதென்றால் நாலாவித பக்ஷணம் எதற்கு? ருசியோ, தேவையற்ற பேச்சோ பண்பட்ட அந்த நாக்கில் இடம் பெறாது.


    இதை அடைந்தவர்கள் சித்தர்கள் எனலாமா? ஒருகாலத்தில் சித்தர்கள் இவ்வாறு புரியாத புதிர்களாக வாழ்ந்து மறைந்துவிட்டார்கள். எங்கோ சிலர் இன்றும் இருக்கலாம். அவர்களை அடையலாம் , ஜடா முடியை, தாடியை, காவியைத்தேடி ஓட வேண்டுமா என்ன ? அது இப்போது மலையேறி மாறிவிட்டது. விஞ்ஞான வளர்ச்சியில், கல்வி முதிர்ச்சியில், யோகப்பயிற்சியில் பழைய உருவம் அடையாளம் எல்லாம் தேய்ந்து போய்விட்டது. இன்றும் சிலர் நம்மிடையே சித்தர்களாகவே உலவி வருவதை நாம் தெரிந்து கொள்ள முடியவில்லை. அறிய முடியும். நெருங்கிப்பழகினால் புரியும். அவர்கள் விளம்பரம் தேடுபவர்கள் அல்ல. சேனலில் முகம் காட்டுவதோ, பகட்டோ அற்றவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பழகினால் அவர்களை நீங்கள் உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியிலேயே கூட காணமுடியும் அறிய முடியும். முயல வேண்டும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
Working...
X