Announcement

Collapse
No announcement yet.

Patthu, echil, madi, vizhuppu

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Patthu, echil, madi, vizhuppu

    Courtesy: Sri.Mayavaram Guru
    பத்து! எச்சில்! மடி!! விழுப்பு!!!
    =======================
    நான் சிறுவனாக இருந்தபோது, எனது தம்பிகள், அக்காமார்கள் என்று கொஞ்சம் பெரிய குடும்பமாக மிகவும் சாதாரணமான பிராம்மண "ஜாதி" வாழ்க்கையில் இருந்த காலத்தில் வீட்டிலுள்ள வயதான ஸ்த்ரீகள் ஆசார அனுஷ்டான விஷயங்களில் கடுமையான நியமங்களைக் கடைப்பிடித்து வந்தார்கள். அவற்றில் முக்கியமானவை மடி, விழுப்பு, பத்து, எச்சில் போன்றவை. அத்தை, பாட்டி போன்ற வயதான பெண்மணிகள் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்களானால் அவர்களுக்காகத் தனியாக உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் "மூங்கில் கம்பில் உலர்த்தப்பட்டிருக்கும் புடவைகள், ரவிக்கைகள் ஆகியவற்றை இன்னொரு மூங்கில் கம்பின் உதவியுடன் எடுத்து அவர்கள் உடுத்திக்கொள்வார்கள். அதன் பிறகு அவர்களது ஜப, தவங்கள், பூஜை, சாப்பாடு ஆகியவை முடியும்வரை யாரும் அவர்கள்மீது பட்டுவிடக் கூடாது. மிகச் சிறிய குழந்தைகள் என்றால் அவை முழுவதும் அம்மணமாக்கப்பட்டால் மட்டுமே இம்மாதிரி ஸ்ட்ரிக்டான ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் வயதான பெண்களின் மடியில் அமர அனுமதி உண்டு. அவர்கள் "மடி"யாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட கடுமையான "குடும்பத்தினுள் தீண்டாமை" என்று சொல்லலாம்.
    குளிக்காதவர்கள், நேற்று அணிந்துகொண்ட உடைகளுடன் இருப்பவர்கள் "விழுப்பு" என்ற "அட்ஜெக்டிவ்வுடன்" அழைக்கப்படுவார்கள். இம்மாதிரி மடி, விழுப்பு போன்ற சிஷ்டாசாரங்களைச் சில ORTHODOX ஆண்களும் கடுமையாக அனுஷ்டிப்பதையும் நான் அந்தக் காலத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது யோசித்துப்பார்த்தால் இம்மாதிரியான் ஸ்ட்ரிக்ட்டான ஆசார அனுஷ்டானங்கள் INFECTION ஏற்பட்டுவிடக் கூடாது என்ற சுகாதார நோக்கத்தில்தான் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய விஞ்ஞான அறிவு தர்க்கரீதியாக நமக்கு உணர்த்துகிறது என்று தோன்றுகிறது. தவிர இன்னொரு விஷயம் "பத்து" என்ற வார்த்தை. பத்து என்ற எண் அல்ல. வேகவைத்துச் சமைக்கப்பட்ட உணவு வகைகள் "பத்து" என்று சொல்லப்படுகின்றன. சாதம், குழம்பு, ரசம் ஆகியவை "பத்து" என்ற Categoryயில் வருபவை.
    மாத்வ பிராம்மணர்கள் இன்னும் அதிக ஆசாரத்துடன் உப்பு போட்ட எந்தப் பண்டமுமே "பத்து" என்று தனியாக வைப்பார்கள். "பத்து" என்று சொல்லப்படும் சமைத்த உணவுப் பண்டங்கள் "பத்து" அல்லாத பால், தயிர், மோர், இவற்றின் அருகில் வைக்கமாட்டார்கள். நான் ஸ்மார்த்த வடமா பிரிவைச் சேர்ந்த பிராம்மண இனம். எனவே சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்பத்துப் பெரியவர்கள் அனுஷ்டித்த ஆசாரங்களைச் சொல்கிறேன். இவை சிஷ்டாசாரங்கள் எனப்படுபவை. "சிஷ்ட" என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்குக் கற்பிக்கப்பட்ட என்ற விசேஷண அர்த்தம்; ஆசாரம் என்றால் நடத்தை, நன்னடத்தை என்று அர்த்தம். இத்தகைய பிராம்மண ஆசாரங்கள் நிச்சயம் சுகாதாரம், ஆரோக்ய வாழ்வு இவற்றின் அடிப்படையில் அமைந்தவை என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
    அடுத்தது "எச்சில்". எச்சில் என்பது பிராம்மணர்களில் ஒரு பிரிவுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிராம்மணப் பிரிவுகள், பிராம்மணர் அல்லாதவர்கள், மிலேச்சர்கள் என்ற அடை மொழியுடன் சொல்லப்படும் பாரதீயர்கள் அல்லாதவர்கள் எல்லோராலுமே விலக்கப்பட வேண்டிய சமாசாரம்.
    துரதிருஷ்டவசமாக இன்றைய பிராம்மண ஜாதிகளின் பல பிரிவினரிலும், இளைஞர்கள், யுவதிகள் சிறுவர் சிறுமியர் மட்டுமில்லாமல் அனுபவமும் கல்வியும் பெற்று நல்ல நிலைமையில் வாழ்க்கையை நகர்த்தும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் உள்பட எச்சில் என்ற அநாசாரத்தை சர்வ சாதாரணமாகக் கடைப் பிடிக்கிறார்கள். "பத்து" என்று சொல்லப்படும் வேகவைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள் மூன்றரை மணிநேரத்தில் சில பாக்டீரியாக்களின் பாதிப்பு காரணமாக ஊசிப்போகவோ கெட்டுப் போகவோ வாய்ப்புகள் உண்டு என்பதால்தான் அவை மற்ற உணவுப் பொருட்கள் அருகில் வைக்கப்படுவதில்லை. சாதம், சாம்பார், குழம்பு, ரசம் இவற்றைப் பரிமாறிய பின்னர் கைகளைக் கழுவிய பின்னரே மோர், தயிர், நெய், பால் இவற்றைத் தொடுவது என்ற சிஷ்டாசாரத்தைக் கடுமையாகப் பின்பற்றுவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு.
    பிராம்மணர்களில் பல பிரிவினர் "பத்து" என்பதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை. "எச்சில்" என்ற அருவருக்கத்தக்க அநாசாரத்தை சர்வ சாதாரணமாகச் செயல்படுத்திவருவது சகிக்க முடியாததாக இருக்கிறது.
    நல்ல ஆசார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிப்பவர்கள் எச்சில் என்ற அநாசாரத்தில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வருத்தத்துக்குரியது. என்ன செய்வது, மற்றபடி மிக நல்ல மனிதர்கள், இவர்களுடன்தானே இந்தக் கலியுக வாழ்வை நகர்த்தியாக வேண்டியுள்ளது?
    எங்கள் வீடுகளில் முன்பெல்லாம் பல்முளைத்த சிறுகுழந்தைகள்கூடக் குடிக்கும் தண்ணீரையோ பால், காபி, ஓவல்டின் என்ற பானமாக இருந்தாலும் சரி டம்ளரை வாயில் வைத்து எச்சில் பண்ணிக் குடிக்க அனுமதிக்கவே மாட்டார்கள். பல் விழுந்து புதிய பல் முளைத்துவிட்டாலே ஒரு சிறுவனோ சிறுமியோ பெரியவர்கள் அனுஷ்டிக்கும் சிஷ்டாசாரங்களைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டுமென்பது எங்கள் பாட்டியும், தாத்தாவும் மற்ற பெரியவர்களும் எங்களுக்கு அடி, உதைகளுடன் சொல்லிக் கொடுத்த நல்ல விஷயங்கள். எச்சில் பண்ணிக் குடிப்பதற்கே என்று கப், சாசர்கள், கண்ணாடி டம்ளர்கள், மெல்மோவேர், கோப்பைகள் இப்போதெல்லாம் எல்லாப் பிராம்மணர்கள் வீடுகளுக்கும் வந்துவிட்டன. ஆசார சீலர்கள் சிலர் வாழும் வீடுகளில் இன்னமும்கூட பீங்கான் கோப்பைகளோ பிளாஸ்டிக் கோப்பைகளோ இருப்பதில்லை. ஆசார அனுஷ்டானங்களில் தீவிரமுள்ள சில வைணவப் பிராம்மணக் குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் வெள்ளிடம்ளர், டபராவில்தான் காபி குடிக்கிறார்கள். அப்போதும்கூடச் சூடான காப்பியையோ பாலையோ டபரா டம்ளர்கள் மூலம் ஆற்றி வாயிலிருந்து மூன்று அங்குலம் உயரே தூக்கித்தான் அருந்துவார்கள்.
    தண்ணீரையோ, வேறு சூடான அல்லது குளிர்ந்த பானங்களையோ வாயில்வைத்து எச்சில் பண்ணிக் குடித்தால்தான் ருசியை அனுபவிக்க முடியும் என்ற தாத்பர்யம் மிலேச்சர்கள் என்று அழைக்கப்படும் பாரதீயர்கள் அல்லாதார்கள் நம்மிடையே ஒட்ட வைத்த பண்பாடு.
    சென்னை மயிலாப்பூரிலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், பக்தர்கள் அருந்துவதற்காக இரண்டு டம்ளர்கள் வைத்து வசதி செய்யப்பட்டிருக்கும். அங்கே ஏகாதசி, மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா, சுவாமி விவேகானந்தர், சாரதாதேவி ஆகியோர் ஜயந்தி தினங்கள் மற்றும் பல விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும்.
    பஜனை நிகழ்ச்சிகள் முடிந்த பின் தொன்னையில் பிரசாரம் அளிப்பதை வாங்குவதற்காக நீண்ட (கியூ) வரிசையில் பக்தர்கள் நிற்பார்கள். குடிக்கும் தண்ணீரை அருந்துவதற்கும் ஒரு நீண்ட வரிசை நின்றுகொண்டு, இரண்டே டம்ளர்கள்தான் என்பதால், ஒருவர் குடித்தபின் அடுத்தவர் என்ற நடைமுறை இருக்கும். அப்போது ஒரு மஹானுபாவர், பிராம்மணர்தான் ஜாதியில், ஆனால் தெலுங்குப் பிராம்மணராகவோ, வட இந்திய பிராமணராகவோ இருக்கலாம். டம்ளர் கையில் கிடைத்தவுடன் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்து அவருக்குப்பின்னால் நிற்கும் முப்பது பேர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே டம்ளரை நன்றாக வாய்க்குள் வைத்து எச்சில் பண்ணிக் குடிக்கும் அருவருப்பான காட்சியை அத்தனைபேர் எதிரிலும் அரங்கேற்றினார். அவர் அவ்வாறு தண்ணீரை எச்சில் பண்ணிக் குடிப்பதை ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் இல்லத்து சின்ன வயதுப் பையன்கள் அருவருப்புடன் பார்க்கிறார்கள் என்ற கூச்சம்கூட அந்த மனிதரிடம் இல்லை. அவ்வாறு எச்சில் பண்ணிக் குடித்து முடித்தபின் அதே குடிநீர்க் குழாயில் பட்டதோ படவில்லையோ என்ற சந்தேகத்துடன் தண்ணீரால் ஒரு புரோக்ஷணப் பண்ணி, அலம்புகிறாராம், அடுத்தவரிடம் கொடுத்தார் அம்மனிதர்.
    ஆனால் அன்று அந்த டம்ளர் அனைவராலும் தள்ளிவைக்கப்பட்டது. தங்களைப் பிராம்மண ஜாதி என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் இனத்தவர்கள் பொது இடத்திலாவது எல்லோரும் குடிக்கும் தண்ணீர் டம்ளரையாவது எச்சில் பண்ணிக் குடிக்காமல் பிராம்மண ஜாதி மரியாதையைக் காப்பாற்றலாமில்லையா?
    தண்ணீரோ, காபியோ வேறு பானங்களோ எச்சில் பண்ணாமல் தூக்கிக் குடிப்பது என்ற நல்ல பழக்கத்தை, பிராம்மணர்கள் மட்டுமின்றி அனைத்துச் சமூகத்தினரும் கடைப்பிடிப்பதும் குழந்தைகளுக்குக் கற்பிப்பதும் ஆரோக்யம்! சுகாதாரம் கருதியாவது இதைக் கடைப்பிடிக்கலாம் அல்லவா?.
Working...
X