Announcement

Collapse
No announcement yet.

'இதற்கும்' இருக்கு; குறுக்கு வழி!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'இதற்கும்' இருக்கு; குறுக்கு வழி!

    நேர்மையான வழியில் கிடைப்பவை தான் நிலைத்து நிற்கும்; குறுக்கு வழியில் தேடிய எதுவுமே நிலைக்காது என்பது முன்னோர் வாக்கு. ஆனால், குறுக்கு வழியில் முக்திக்கு வழிகாட்டுகிறார் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றக்கரையில் குடிகொண்டுள்ள குறுக்குத்
    துறை முருக கடவுள்!
    இத்தலத்திற்கு குறுக்குத் துறை என்று பெயர் வரக் காரணம், ஒரு சமயம், காசிக்கு தன் தந்தையின் அஸ்தியைக் கொண்டு சென்ற ஒருவன், அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைத்தான்; அதில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. மீதம் இருந்த அஸ்தியில் ஒரு பகுதியை தாமிரபரணியிலுள்ள சிந்துபூந்துறையில் கரைத்த போது, அஸ்தியில் இருந்த எலும்புகள் மலராக மாறின. இன்னும் கொஞ்சத்தை கருப்பந்துறையில் கரைத்த போது, வெண் சாம்பல், கருப்பாக மாறியது. குறுக்குத்துறையில் கரைத்தபோதோ, செடிகளில் குருத்து விடுவது போல எலும்புகள் குருத்தாக மாறியது. இதுவே, குருத்து துறையாக இருந்தது, பின், குறுக்குத்துறையாக மாறியது.
    மேலும், ஒரு உயிர், பிறவா நிலையை அடைய வேண்டு மென்றால், முக்தி பேற்றை அடைய வேண்டும். அதற்கு உடல், மனம், ஆன்மா என எல்லாவற்றையும் வருத்தி, இறைவனை நோக்கி கடுமையான தவம், யோகா, தியானம் செய்ய வேண்டும் என்பர். முனிவர்களும், மகான்களும், அசுரர்களும் இத்தகைய கடுமையான வழிமுறைகளை கடைபிடித்தே முக்தி பேற்றை அடைந்துள்ளனர். ஆனால், இது எதுவுமே இல்லாமல், குறுக்கு வழியில், குறுக்குத்துறை முருகப்பெருமானை மனம் உருக வணங்கினாலே போதும், பிறவாநிலையான முக்தியைப் அடைந்து விடலாம். இதைத்தான் குறுக்குவழியில் இறையருள் பெறுவது என்கின்றனர்.
    இக்கோவில் உருவான வரலாறு பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது...
    திருநெல்வேலியின் காவலராக இருந்தவர் வடமலையப்ப பிள்ளை. இவரது காலத்தில், சிற்பி ஒருவர், தாமிரபரணி நதியின் நடுவில் இருந்த பாறையில், முருகன் சிலை ஒன்றை செதுக்கினார். செதுக்கியவர் பாறையை உடைத்து சிலையை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டார். அது, கண்டுகொள்ளப்படாமல் இருந்துள்ளது. அங்கே நீராட வந்த ஒரு மூதாட்டி, அந்த முருகனுக்கு சிறு அளவில் பூஜை செய்து வந்தார். நாளடைவில், பக்தர்கள் பெருகப் பெருக, திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கோவில் கட்டப்பட்டது. இவ்வகையில், இது ஒரு குடைவறைக் கோவிலாகவும் உள்ளது. முருகன் என்றால் மலை இருக்க வேண்டும்.
    இக்கோவிலை, 'திருவுருமாமலை' என்று குறிப்பிடுகின்றனர். வெள்ளம் வந்தால், இந்தக் கோவில் மூழ்கி விடும். அந்த சமயத்தில் அருகிலுள்ள மேலக்கோவிலில் பூஜை நடத்தப்படும்.
    திருநெல்வேலி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 4 கி.மீ., பயணித்தால், குறுக்குத்துறைக்கு சென்று விடலாம். இங்குள்ள தாமிரபரணியில் நீரோட்டம் வேகமாக இருக்கும்; பக்தர்கள் கவனமாக நீராட வேண்டும். இங்கு ஆவணித் திருவிழா விசேஷம்; வாழ்வில் ஒரு முறையேனும், குறுக்குத்துறை முருகனைத் தரிசியுங்கள்; குறுக்குவழியில் பிறவா வரம் பெறுங்கள்.


    தி.செல்லப்பா
Working...
X