Announcement

Collapse
No announcement yet.

கடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்?

    இந்த உலகத்தில், சமூகத்தில், அலுவலகத்தில், குடும்பத்தில், உறவுகளிடத்தில், போராடி போராடி நான் மிகவும் களைத்துவிட்டேன். ஒரு கட்டத்தில் “சே…. என்னடா வாழ்கை …!” என்று வெறுத்தே போய்விட்டது. எங்காவது கண்காணாத இடத்துக்கு போனால் என்ன என்று தோன்றியது.
    யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு ஒரு நாள் வெளியேறினேன். மனம் போன போக்கில் நடந்தேன்.
    “எங்கே நிம்மதி?” “எங்கே நிம்மதி?” அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நடந்து நடந்து ஊருக்கு வெளியே இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் வந்துவிட்டேன்.
    கடைசியாக ஒரு முறை கடவுளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது.
    “கடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நீ பதில் சொல் போதும்!”
    காட்டுக்கத்தல் என்பார்களே அது போல அந்த அத்துவானக்காட்டில் கத்தினேன்.
    திடீரென இடி இடிப்பது போல கடவுளின் குரல் கேட்டது…. “மகனே உன்னைச் சுற்றி ஒரு முறை பார்….”
    கடவுள் பதில் சொன்ன சந்தோஷம் ஒரு பக்கம். திகைப்பு ஒரு பக்கம்.
    சுற்று முற்றும் பார்த்தேன்.

    கடவுள் தொடர்ந்தார்… “மூங்கில்செடிகளும் நாணலும் தெரிகிறதா?”
    “ஆம்… அதற்கு என்ன இப்போது?”
    மூங்கில் செடிகளையும் நாணலையும் நான் நடும்போது மிகவும் கவனமாக அவற்றை பார்த்துக்கொண்டேன். பாரபட்சமின்றி அவை வளர்வதற்கு தேவையான சூரிய ஒளி, தண்ணீர் ஆகியவற்றை குறைவின்றி அவற்றுக்கு கொடுத்தேன். நாணல்கள் சற்று சீக்கிராமகவே வளர்ந்துவிட்டன. பச்சை பசேலென்ற அவற்றின் பசுமை பூமிக்கு அழகு சேர்த்தது. (மூங்கில், நாணல் இரண்டுமே புல்லினத்தின் ஒரு வகைகள் தான்!)
    ஆனால் மூங்கில் செடிகளிலிருந்து ஒன்றுமே வரவில்லை. நான் நட்டபோது எப்படி இருந்தனவோ அப்படியே தான் இருந்தன. இருப்பினும் நான் அவற்றின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.
    அடுத்த ஆண்டு நாணல்கள் இன்னும் பெரிதாக வளர்ந்தன. அவை வளரும் இடத்திற்கு மேலும் மேலும் அழகையும் பசுமையையும் சேர்த்தன. ஆனால் இம்முறையும் மூங்கில் செடிகளிலிருந்து ஒன்றுமே வரவில்லை. அப்படியே தான் அவை இருந்தன. இருப்பினும் நான் அவற்றின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.
    மூன்றாம் ஆண்டும் இப்படியே. மூங்கில் செடி எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை. ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
    நான்காம் ஆண்டும் அதே நிலை தான். எந்த வித வளர்ச்சியையும் மூங்கி செடிகள் காட்டவில்லை.
    ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
    ஐந்தாம் ஆண்டு மூங்கில் செடி மிக மிக சிறியதாக ஒரு முளை விட்டது. நாணலுடன் ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை என்று கூறலாம். அத்தனை சிறியது. ஆனால் ஆறு மாதங்கள் கழித்து மூங்கில் சுமார் 100 அடி உயரத்துக்கு வளர்ந்தது.
    எப்படி தெரியுமா? ஐந்து ஆண்டுகளாக தனது வேரை வளர்ப்பதற்கு அது செலவிட்டது.
    அந்த வேர்கள் தான் தற்போது அதன் அசாத்திய உயரத்தை தாங்குகின்றன. தாங்க முடியாத சுமை என்று நான் யாருக்கும் எப்போதும் தருவதில்லை.
    (அறிவியல் படி மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு தாவர இனமாகும். ஒரே நாளில் 250 செமீ கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.)
    “மகனே… உனக்கு தெரியுமா மூங்கில் எப்படி தன் வேரை ஆழமாக வளர்த்துக்கொண்டு வந்ததோ அதே போல நீ கஷ்டப்படும்போதெல்லாம் உனது வேரை வளர்த்து வந்தாய். நீ நிமிர்ந்து நிற்பதற்கு. (YOU HAVE BEEN GROWING YOUR ROOTS).”
    “நான் மூங்கில் மீது எப்படி நம்பிக்கை இழக்கவில்லையோ அதே போல உன் மீதும் நம்பிக்கை இழக்கமாட்டேன்! யாருடனும் உன்னை ஒப்பிட்டுக்கொள்ளாதே. மூங்கிலை நான் படைத்த நோக்கம் வேறு. நாணலை நான் படைத்த நோக்கம் வேறு. ஆனாலும் இரண்டுமே காடுகளுக்கும் நதிக்கரைகளுக்கும் அழகு சேர்ப்பவை தான்.”
    “உன் நேரம் நிச்சயம் வரும். அப்போது நீயும் மூங்கிலை போல எல்லாரும் ஆச்சரியப்படத்தக்க அளவு உயர்வாய்!” கடவுள் ஆசி கூறினார்.
    “எவ்வளவு தூரம் நான் உயர்வது? அதற்கு அளவு ஏதாவது இருக்கிறதா??”
    “மூங்கில் எவ்வளவு உயரம் வளரும்?”
    “எந்தளவு வேரை அது ஆழமாக விடமுடியுமோ அந்தளவு உயரமாக!”
    “அதே தான்… எந்தளவு நீ சோதனைகளை சந்திக்கிறாயோ அந்தளவு மேலே உயர்வாய். உன்னால் எவ்வளவு உயரமாக போகமுடியுமோ அவ்வளவு உயரமாக நீ போகவேண்டும். அதுவே எனக்கு பெருமை!” என்றார் கடவுள்.
    புரண்டு புரண்டு படுத்ததில் கனவு கலைந்தது.
    அத்தனையும் கனவா? ஆம்… கனவு தான். ஆனால் அர்த்தமுள்ள கனவு. என் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொன்ன கனவு.
    இறைவன் ஒரு போதும் நம்மை கைவிடுவதில்லை.
    உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நாளையும் கெட்ட நாளாக நினைக்கவேண்டாம். நல்ல நாட்கள் மகிழ்ச்சியையும், மோசமான நாட்கள் அனுபவத்தையும் நமக்கு கொடுக்கும். இரண்டுமே வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை.
    மகிழ்ச்சியான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு நம்முடைய விடாமுயற்சியும், புதுமை கலந்த செயல்திறனும் தேவை. இது அதிர்ஷ்டத்திலோ அல்லது குருட்டாம்போக்கிலோ வருவதல்ல. நமது தேர்வுகளில் தான் வருகிறது. நமது செயல்களில் தான் விளைகிறது. (It is our choice and our action!)
    ஒவ்வொரு நாளும் நம்மை நிரூபிக்க நமக்கு புதுப் புது வாய்ப்புக்கள் தரப்படுகின்றன. அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு செயலாற்றுவதில் தான் நமது வாழ்க்கைப் பயணம் அடங்கியிருக்கிறது. நம் கையில் அடங்கியிருக்கிறது.
    ஆம்… நம் வாழ்க்கை நம் கையில்! பிறகென்ன தூள் கிளப்புவோம் வாருங்கள்….!!
    - See more at: http://rightmantra.com/?p=12511#sthash.jUqlnJrM.dpuf
Working...
X