Notice
உங்களிடம் ஒரு கேள்வி…. அதிகம் பொருளீட்டுபவர் செல்வந்தரா? அல்லது அதிகம் கொடுப்பவர் செல்வந்தரா? அதிகம் கொடுப்பவரே செல்வந்தர் என்றால் இவர் பில்கேட்ஸ்க்கெல்லாம் பில்கேட்ஸ். பிறர் நலனுக்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்து கொண்டவர். என்ன சொல்ல… ராமகிருஷ்ண பரமஹம்சரையும் திருவள்ளுவரையும் ஒருங்கே சந்தித்து உரையாடியது போல இருந்தது எனக்கு. நமது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கெல்லாம் சற்று கூட யோசிக்காது அருமையான பதில்களை தந்து நம்மை பிரமிக்க வைத்தார்.
………………………………………………………………………………………………………………….
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள் 231)
விளக்கம் : ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.
………………………………………………………………………………………………………………….
பில் கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தப்போ… அவரை பார்க்க விரும்பி அமெரிக்க அரசாங்கம் கிட்டே மனு கொடுத்தவங்க மொத்தம் 120 பேர். அவங்க எல்லாம் மிகப் பெரிய செல்வந்தர்கள், தொழிலதிபவர்கள், பிசினஸ் சக்கரவர்த்திகள் & மத்திய அரசின் உயர் அதிகாரிகள் etc.etc.
ஆனால் கிளிண்டன் தான் இந்தியாவுல பார்க்க விரும்புறதா ரெண்டு பேரை குறிப்பிட்டு நம்ம அரசாங்கத்து கிட்டே மனு கொடுத்தாரு.
அதுல ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம். மற்றொருவர் நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த பிரபலம்.
ஆனால் கிளிண்டன் தான் இந்தியாவுல பார்க்க விரும்புறதா ரெண்டு பேரை குறிப்பிட்டு நம்ம அரசாங்கத்து கிட்டே மனு கொடுத்தாரு.
அதுல ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம். மற்றொருவர் நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த பிரபலம்.
இவரை பத்திய முன்னோட்டம் மட்டுமே ரெண்டு பதிவு தனியா கொடுக்கணும். அது கூட இவர் செய்திருக்கும் சாதனைகளுக்கு பத்தாது. இந்த சந்திப்பை ஜஸ்ட் லைக் தட் ஓரிரு பதிவுகள் போட்டு நாம் நிறைவு செய்ய முடியாது என்னுமளவுக்கு கருத்து சுரங்கத்தை அள்ளி அள்ளி தந்திருக்கிறார் இம்மனிதர்.
நாம் பிரபலங்களை சந்திக்கும்போது கேள்வி-பதில் ஸ்டைலைவிட ஒரு CASUAL உரையாடல் போலத் அமைந்துவிடுவது கேள்வி-பதிலை விட மிக மிக பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
இவர் கிட்டே பேசப் பேச வாழ்க்கையில் பல விஷயங்களை புரிந்துகொண்டேன். நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு கேள்வியை இவரிடம் எங்கள் பேச்சினூடே கேட்டேன்.
வெற்றிகரமான வாழ்க்கை என்பது என்ன?
“ஐயா… வெற்றிகரமான வாழ்க்கை என்பது என்ன? அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித அர்த்தத்தை கொடுக்கிறார்களே… உதாரணத்திற்கு பணம் சம்பாதிச்சு கார், பங்களாவோட, பல வேலைக்கார்களோட கோடீஸ்வரனாக வாழ்வது தான வெற்றிகரமான வாழ்க்கை என்று பரம ஏழை நினைக்கிறான்… பி.பி., சுகர் என்று நோய்கள் உள்ள ஒரு கோடீஸ்வரனோ நோயின்றி வாழும் வாழ்க்கையையே வெற்றிகரமான வாழ்க்கை என்று நினைக்கிறான். வேறு சில ஆரோக்கியமான மிகப் பெரிய கோடீஸ்வரர்களுக்கோ கொஞ்சி மகிழ ஒரு குழந்தை (வாரிசு) இருப்பதில்லை. வேறு சிலர் சினிமாவில் மிக மிக பிரபலமாகி புகழ் பெறுவது தான் வெற்றிகரமான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களோ தங்கள் ப்ரைவசியை இழந்துவிட்டதாகவும், சுதந்திரமாக சாலையில் நடமாடக்கூடிய ஒருவனே வெற்றிகரமான மனிதன் என்று நினைக்கிறார்கள்…இன்னும் சிலரோ சகல ஆதிகாரத்துடன் நாடாளுவதையே வெற்றிகரமான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களோ நிம்மதியின்றி தவிக்கிறார்கள். இப்படி வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கிறது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் நீங்கள் சொல்லுங்கள் ஐயா உண்மையில் வெற்றிகரமான வாழ்க்கை என்பது எது?” என்று நமது கேள்வியை வீசினோம்.
இந்த மனுஷர் ஒரு செகண்டாவது யோசிக்கணுமே? ஹூம்…. ஹூம்…
“எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதே வெற்றிகரமான வாழ்க்கை!!” என்றார் பளிச்சென்று தேங்காய் உடைப்பது போல.
அவர் தொடர்ந்து பேசுகையில் “சின்ன வயசுல அம்மா ஒரு நாள் என்னிடம்… கவலைப்படாமல் ஒருவர் இருக்கமுடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன் யாராயிருந்தாலும் அவங்களுக்கு என்று ஒரு கவலை இருக்கும். ஆண்டியாக இருந்தாலும் சரி… நாட்டையாளும் அரசனாக இருந்தாலும் சரி… அவரவர் தகுதிக்கேற்ப பிரச்சனைகளும் கவலைகளும் அவர்களுக்கு இருக்கும்.”
நாம் : “உண்மை தான் ஐயா…”
“ஆனா அம்மா சொன்னங்க ஆயுசு முழுக்க ஒருத்தர் கவலை இல்லாம நிச்சயம் இருக்கமுடியும் அப்படின்னு. நான் சொன்னேன் ‘அப்படி இருக்கவே முடியாது’ன்னு. ஆனா அம்மா முடியும்னு சொன்னங்க. நான் எப்படின்னு கேட்டேன். கவலையே இல்லாம இருக்கணும்னா ஆயுசு முழுக்க கவலைப்பட்டுகிட்டு இரு அப்படின்னாங்க…..என்னம்மா சொல்றீங்க… குழப்புறீங்களே…? அப்படின்னேன்.”
“ஆயுசு முழுக்க நீ உன்னைப் பத்தி கவலைப்படாம மத்தவங்களை பத்தி கவலைப்பட்டுகிட்டு இரு அப்படின்னாங்க. அதாவது மத்தவங்களுக்காக நீ என்ன செய்யப்போறே… அவங்க தேவைகள் என்ன… இப்படி நீ கவலைப்பட்டுகிட்டு இருந்தேன்னா நீ ஆயுசு முழுக்க சந்தோஷமா இருக்க முடியும் அப்படின்னாங்க.”
“இதை சொன்னது யாரு…? படிப்பறிவே இல்லாத என் அம்மா!!”
(நாம் எழுந்து நின்று கைகளை தட்டுகிறோம்)
சுகங்களை இழப்பவர்கள் தியாகிகள் அல்ல… பெறுபவர்களே தியாகிகள்
நாம் : “ஒரு மகன் தன் தாயிடம் கற்றுக்கொள்ளாத விஷயமா உலகத்திடம் கற்றுக்கொள்ளப் போகிறான்?”
“சந்தோஷம் என்பது பொதுவாக எதுவரை என்று பார்த்தோமானால் ஒரு விஷயத்தை அனுபவிக்கும் வரை தான். நல்ல இனிப்பு பலகாரம் ஒன்னை சாப்பிடுறீங்க. சாப்பிடும்போது சந்தோஷமா இருக்கும். அது வயித்துக்குள்ளே போனவுடனே அடுத்த நிமிஷம் நிமிஷம் அந்த சந்தோஷம் காணாம போயிடுது. நல்ல பாட்டு ஒன்னை கேக்குறீங்க. மனசுக்கு இதமா இருக்கு. பாட்டு முடிஞ்சவுடனே அந்த சந்தோஷம் போய்டுது. ஒரு நல்ல காரியம் வீட்டுல நடக்குது. எல்லாரும் சந்தோஷமா இருக்கோம். அது முடிஞ்சு எல்லாரும் கிளம்பி போனவுடனே அந்த சந்தோஷம் குறைஞ்சிடுது. எனவே எல்லா சந்தோஷமும் ஒரு கால அளவுக்கு உட்பட்டு தான் இருக்கு. எல்லாவற்றுக்கும் மேல் தலைசிறந்த சந்தோஷம் என்று மனிதர்கள் நினைக்கூடிய இல்லற இன்பம் (SEXUAL PLEASURE) கூட 7 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. ஆராய்ச்சியிலேயே சொல்லியிருக்கிறார்கள்…. அது ஜஸ்ட் வெறும் 7 நிமிடங்கள் தான் என்று”
சந்தோஷத்திற்கு இவர் கொடுக்கும் விளக்கம் தான் எத்தனை உண்மை? என் பிரமிப்பு அடங்க நேரம் பிடித்தது.
பொதுவா தியாகி என்று யாரை சொல்கிறார்கள்? சுகங்கள் அனைத்தையும் இழந்தவர்களை மற்றவர்களுக்காக இழப்பவர்களை தியாகிகள் என்று சொல்கிறோம். தியாகி என்றால் சுகங்களை இழப்பவர்கள் அல்ல பெறுபவர்கள்…..
“அப்போ எதுல தான் நிலைத்த நீடித்த சந்தோஷம் இருக்கு அப்படின்னா… மத்தவங்களோட சந்தோஷத்துக்காக நாம நாம செய்யும் முயற்சிகள், தியாகங்கள் இதுல தான் சந்தோஷம் இருக்கு. பொதுவா தியாகி என்று யாரை சொல்கிறார்கள்? சுகங்கள் அனைத்தையும் இழந்தவர்களை மற்றவர்களுக்காக இழப்பவர்களை தியாகிகள் என்று சொல்கிறோம். தியாகி என்றால் சுகங்களை இழப்பவர்கள் அல்ல பெறுபவர்கள்…..”
“உதாரணத்துக்கு ஒரு சின்ன விஷயம் சொல்றேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு போறதுக்கு பஸ்ஸுக்காக பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றீங்க. ரொம்ப நேரம் கழிச்சு ஒரு பஸ் வருது. பஸ்ல ஒரே கூட்டம். உங்களுக்கு உட்கார இடம் கிடைக்கலை. கஷ்டப்பட்டு கூட்டத்துல அந்த புழுக்கத்துல நிக்குறீங்க. ஒரு ரெண்டு ஸ்டாப் தள்ளி போனவுடனே ஒரு சீட் கிடைக்குது. அப்பாடான்னு உட்கார்றீங்க. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ற நேரத்துல ரெண்டு ஸ்டாப் கழிச்சி கைக்குழந்தையோட ஒரு அம்மா பஸ்ல ஏற்ராங்க. அவங்களுக்கு சீட் கிடைக்கலே. யாருக்கும் எழுந்திரிச்சு அவங்களோட சீட்டை கொடுக்க மனசில்லே. நீங்க உடனே எழுந்திரிச்சு அந்தமாவுக்கு சீட் கொடுக்குறீங்க. அவங்க ‘நன்றி’ சொல்லிட்டு சந்தோஷமா உட்கார்றாங்க. இப்போ நீங்க நிக்குறீங்க. உங்க உடம்பு கஷ்டத்தை அனுபவிக்க ஆரம்பிச்சிடும்…. ஆனா மனசு சந்தோஷமா இருக்கும். உங்களுடைய சுகத்தை நீங்க இன்னொருத்தருக்காக இழக்குறீங்க. ஆனாலும் மனசு சந்தோஷமா இருக்கும். ஒரு நல்ல காரியம் பண்ணினோம் அப்படிங்கிற திருப்தி உங்களுக்கு கிடைக்கும்.”
“ஸ்கூல் படிக்கிற காலத்துல வீட்டுக்கு போகும்போது மாம்பழம் சீசன்ல மாம்பழம் வாங்கிட்டு போவோம். மோர் சாதத்துக்கு அதை தான் தொட்டுக்குவோம்.”
“ஒரு நாள் அதே போல மாம்பழம் வாங்கிட்டு பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு இருந்தேன். பஸ்சுக்கு நாலணா சில்லறை இருக்கு. இதை தவிர 5 ரூபாய் நோட்டு. இது தான் என்கிட்டே இருக்கிறது. அந்த நேரம் பார்த்து பிச்சைக்காரன் ஒருத்தன், ஐயா சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு… ஏதாவது தர்மம் பண்ணுங்க அப்படின்னு கேக்குறான். அவனை பார்த்தா உண்மையில சாப்பிட்டு ரெண்டு நாள் ஆனது போல தான் இருந்தது. கையில கரெக்டா பஸ்ஸுக்கு வெச்சிருக்குற சில்லறை நாலணா அப்புறம் ஒரு 5 ரூபாய் நோட்டு. நாலணாவை இவனுக்கு போட்டுடலாம்னா, பஸ்ஸுல கண்டக்டர் கிட்டே 5 ருபாய் நோட்டை நீட்ட முடியாது. நாலணா டிக்கட்டுக்கு 5 ரூபாய் நோட்டை நீட்டுறியான்னு கேப்பான். என்ன பண்றதுன்னு தெரியலே. நான் ஆசை ஆசையா வாங்கி வெச்சிருக்கிற மாம்பழத்தை அந்த பிச்சைக்காரனுக்கு கொடுத்துட்டேன். அவனுக்கு இதுவாவது கிடைச்சதேன்னு ஒரே சந்தோஷம். அதை கையில சாறு ஒழுக ரொம்ப ஆவலா ருசிச்சு சாப்பிட்டான். நான் ரசிச்சு பார்த்தேன்.
“வீட்டுக்கு வந்தவுடனே சாப்பாட்டுக்கு உட்கார்றோம். சாப்பாட்டுக்கு முன்ன தங்கச்சி மாம்பழத்தை நறுக்கி தட்டுல தருவா. ஏன்னா நாங்க மோர் சாதம் சாப்பிடும்போது அதை தொட்டுக்குவோம்.எனவே தங்கச்சி என்கிட்டே மாம்பழம் வாங்கிட்டு வரலியான்னு? கேட்டாள். நான் நடந்த விஷயம் எதையும் சொல்லலே…. இன்னைக்கு வாங்கிட்டு வரலே அப்படின்னு மட்டும். சொன்னேன்…”
“சாம்பார் சாதம், ரசம் இதெல்லாம் சாப்பிட்டு முடிச்சவுடனே, மோர் சாதாத்துக்கு தொட்டுக்க ஊறுகாயோ மோர் மிளகாயோ கிடைச்ச ஏதோ ஒன்னை அன்னைக்கு தொட்டுகிட்டு சாப்பிட்டேன்.”
………………………………………………………………………………………………………………….
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (குறள் 225)
விளக்கம் : பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்
………………………………………………………………………………………………………………….
“இதுவரைக்கும் எத்தனையோ முறை வகை வகையான மாம்பழங்களை சாப்பிடும்போது மோர் சாதத்துக்கு தொட்டுகிட்டு சாப்பிட்டுருக்கேன். அந்த சந்தோஷம் சாப்பிடும் அந்த கணம்… அதாவது தொண்டைக்குள்ளே அது இறங்குற வரைக்கும் தான் இருக்கும். ஆனா அன்னைக்கு பார்த்தீங்கன்னா எனக்கு பிடிச்ச மாம்பழம் கிடையாது. ஆனா சாப்பிட்டு முடிச்சவுடனேயே எனக்கு அப்படி ஒரு திருப்தி. இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை மனசு அனுபவிக்குது. காரணம் என்னன்னா… ருசியான ஒரு சாப்பாட்டை சாப்பிடும் அனுபவத்தை பிச்சைக்காரனுக்கு மாம்பழம் கொடுத்தது மூலமா நான் இழந்திருந்தாலும், மனசு அந்த அனுபவத்தினால் சந்தோஷப்படுது. இந்த சந்தோஷம் அனுபவிக்கும்போது தான் தெரியும்.”
பொதுவா நம்முடைய சுயநலத்துக்காக நாம மேற்கொள்ளும் முயற்சிகளில் ஜெயிச்சா தான் நமக்கு சந்தோஷம் கிடைக்கும். ஆனா பிறருடைய துன்பத்தை நீக்க நீங்க மேற்கொள்ளும் முயற்சியே உங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.
மரணம் கூட மகிழ்ச்சி தருவது எப்போது ?
“அந்த காலத்துல தப்பு செஞ்ச தூக்கு தண்டனை கைதிகளை தூக்குல போடும்போது அவங்க அழுது ஆர்பாட்டம் பண்ணுவாங்க.. சுதந்திரப் போராட்ட தியாகிகளை பார்த்தீங்கன்னா சந்தோஷமா தூக்கு மேடையில ஏறி, தூக்கு கயிற்றை தொட்டு முத்தம் கொடுத்துட்டு அந்த தண்டனைக்கு தயாரா இருப்பாங்க. எதனால இப்படின்னா… லட்சக்கணக்கான மக்களோட சுதந்திரத்துக்காக இவங்க தங்களோட உயிரை தியாகம் பண்றாங்க அதுனால் அவங்க மகிழ்ச்சியோட மரணத்தை கூட சந்திக்க முடியுது. ஆனா தப்பு செஞ்சிட்டு மத்தவங்களை கஷ்டப்படுத்திட்டு தூக்கு மேடையில ஏறுகிறவனுக்கு மரணம் கூட வலி மிகுந்ததாய் மாறிவிடுகிறது.”
உண்மையான சந்தோஷம் நிலைச்ச சந்தோஷம் எங்கே இருக்குன்னா…பிறர் துன்பத்தை நீக்குவதற்காக நாம எடுக்கும் முயற்சிகளில் இருக்கு. அந்த முயற்சியில நாம ஜெயிச்சி தான் ஆகணும் என்றில்லை. பொதுவா நம்முடைய சுயநலத்துக்காக நாம மேற்கொள்ளும் முயற்சிகளில் ஜெயிச்சா தான் நமக்கு சந்தோஷம் கிடைக்கும். ஆனா பிறருடைய துன்பத்தை நீக்க நீங்க மேற்கொள்ளும் முயற்சியே உங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.
(மறுபடியும் எழுந்து நின்று கைதட்டினேன்.)
உயிர் தப்பிய பூனைக்குட்டி
அவர் இப்படி சொன்னவுடன்….
நாம் : “உங்க கிட்டே ஒரு சம்பவம் சொல்லனும்னு ஆசைப்படுறேன் ஐயா. அதாவது உண்மையான சந்தோஷத்தை எது கொடுக்கும் என்று நீங்கள் சொன்னது எவ்ளோ உண்மை என்பதற்கு நேரடி சாட்சி
இது. அதனால உங்ககிட்டே இதை பகிர்ந்துக்க ஆசைப்படுறேன்.
கொஞ்ச நாள் முன்ன நடந்தது இது. ஒரு முக்கிய வேலையா சென்ற வார இறுதியில் கோவை போயிருந்தேன். அந்த நேரம் பார்த்து புதுவையில் இருந்து நண்பர் ஒருத்தர் என்னை மொபைல்ல கூப்பிட்டார்.
“அண்ணா… அண்ணா… ஒரு சின்ன சிக்கல்… நீங்க தான் வழி சொல்லணும்” அப்படின்னார்.
எனக்கு ஒன்னும் புரியலை. ஏதோ பிரச்னையை அண்ணன் விலை கொடுத்து வாங்கி வந்துட்டாரு போல அப்படின்னு நினைச்சு … “என்ன?????? என்ன???? என்னாச்சு…..?? சொல்லுப்பா….” அப்படின்னேன் பதட்டத்தோட.
“அண்ணா… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலே. நீங்க தான் ஒரு நல்ல வழி சொல்லணும் இதுக்கு. என் வீட்டுல பூனை கத்துற சத்தம் கேட்டுகிட்டே இருந்திச்சு. எங்க வீட்டு பக்கத்துல சுத்திகிட்டிருக்குற பூனை ஒன்னு குட்டி போட்டிருக்கு. அதுங்க தான் கத்துது போலன்னு நினைச்சு நான் விட்டுட்டேன். குட்டிகளை தாய் பூனை ரெண்டு நாள் முன்ன இடம் மாத்திடுச்சு. அதுக்கு பிறகும் ரெண்டு நாளா ஒரே ஒரு பூனையோட சத்தம் மட்டும் கேட்டுகிட்டே இருந்தது. எங்கிருந்து கேட்குதுன்னு மட்டும் தெரியலே… நான் வீடு முழுக்க தேடி பார்த்தேன். கடைசீயில வீட்டு ஜன்னல் பக்கத்துல இருக்குற டிரைனேஜ் பைப்புல இருந்து அந்த சத்தம் வந்துது. நான் போய் எட்டி பார்த்தேன். ஒரு குட்டி அதுக்குளே விழுந்திருந்தது. பூனைக் குட்டிகளை தாய் பூனை வாய்ல கவ்வி இடம் மாத்தும்போது இது தவறி விழுந்துடிச்சு போல… அம்மா பூனை காப்பாத்த முயற்சி பண்ணி முடியலேன்னு விட்டுருக்கும் போல…. இது ரெண்டு நாளா கத்திகிட்டே இருக்கு…. இன்னும் ஒரு ரெண்டு மூணு மணிநேரம் கூட அது தாங்காது போலருக்கு…. என்ன பண்றது? அப்படியே விட்டுடலாமா?” என்று என்னிடம் கேட்டார்.
நான் சற்று யோசித்து… “என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது…. அந்த பூனைக்குட்டியை எப்படியாவது காப்பாத்துங்க” என்றேன்.
“அது முடியாது அண்ணா.. அதுக்கு டிரைனேஜ் பைப்பை தான் உடைக்கணும்” என்றார்.
“உடைங்க… அதனால என்ன இப்போ?”
“அதுக்கு நிறைய செலவாகுமே….”
“ஆகட்டும் என்ன இப்போ… ஒரு பூனைக்குட்டியோட உயிரை விட நீங்க செலவு பண்ற பணம் ஒன்னும் நிச்சயம் பெரிசா இருக்க முடியாது….” என்றேன்.
அப்படியும் அவர் தயங்கினார்.
“அண்ணா எனக்கு பணம் செலவு பண்றதை பத்தி கூட ஒண்ணுமில்லே… ஆனால் அதை நிச்சயம் காப்பாத்த முடியுமான்னு தெரியலே… பைப்பை உடைச்சி கூட அதை உயிரோட மீட்க முடியலேன்னா எல்லாம் வேஸ்ட் தானே?” என்றார்.
“அப்படி அல்ல….. ஒருவேளை அந்த பூனை உங்க முயற்சியால உயிர் பிழைச்சா? அந்த வாய்ப்பை நாம ஏன் விடுவானேன்? ரெண்டாவது அது நிச்சயம் உயிர் பிழைக்கும். அதுனால தான் அது விழுந்தது உங்க கவனத்துக்கு வந்துச்சு. இல்லேன்னா உங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு உடனே முயற்சி பண்ணுங்க. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன்” என்று ஏதோ செண்டிமெண்டாக பேசி அவரை ஆஃப் செய்தேன்.
அப்படியும் அவர் கன்வின்ஸ் ஆகவில்லை.
“சரி… எவ்ளோ செலவாகுதோ அதுல பாதி நான் தந்துடுறேன்… நீங்க உடனே அதை காப்பாத்துற முயற்சியில இறங்குங்க. உடனே பிளம்பரையோ மேஸ்திரியையோ கூப்பிடுங்க. நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் குட்டியோட உயிருக்கு ஆபத்து. உடனே வேலையை ஆரம்பிங்க” என்றேன்.
ஓரளவு சமதானமாகினார். நான் பாதி தந்துவிடுகிறேன் என்று சொன்னதற்கு காரணம்… அவர் இந்த விஷயத்திற்கு சிறிதும் தயங்கக்கூடாது என்பதால் தான். இந்த செலவையெல்லாம் அவரின் ஒரு மாத பாக்கெட் மணியை தியாகம் செய்தாலே ஈடுகட்டிவிடலாம். ஆனால் நான் இதை அவரிடம் அந்த நேரத்தில் சொன்னால் அது எடுபடாது. எடக்கு மடக்கு பேச்சில் நேரம் தான் விரயமாகும். எனவே தான் நான் பாதி தருகிறேன் என்று சொன்னேன். மேலும் பூனை ஒருவேளை காப்பாற்றபட்டுவிட்டால் அவர் அடையக்கூடிய சந்தோஷத்தில் அந்த தொகையை நான் கொடுக்கவேண்டிய அவசியமே ஏற்படாது என்று எனக்கு தெரியும்.
“சரிண்ணா … நான் உடனே எங்க பிளம்பருக்கு ஃபோன் செய்றேன்” என்று கூறிவிட்டு மொபைலை துண்டித்தார்.
“வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டு குட்டியை காப்பாத்திட்டேன் என்ற செய்தியைத் தான் நீங்க எனக்கு சொல்லணும்” என்றேன்.
சரி என்றார்.
சரியாக ஒரு மூன்று மணி நேரம் கழித்து மறுபடியும் கூப்பிட்டார்.
“அண்ணா.. பூனைக்குட்டியை காப்பாத்திட்டேன். நல்ல வேளை அது உயிரோட இருந்தது!!!!!!!!!” அவன் குரலில் அப்படி ஒரு மகிழ்ச்சி கரைபுரண்டது.
“வெரி குட்… இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?” என்றேன்.
“அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாதண்ணா. மனதுக்கு அப்படி ஒரு நிறைவு. நீங்க மட்டும் இதுக்கு வழி சொல்லலேன்னா இப்படி ஒரு சந்தோஷம் இருக்குறதே எனக்கு தெரியாம போயிருக்கும்…”
“பூனைக்குட்டி எப்படி இருக்கு? உங்க கூட இருக்கா எங்காவது ஓடிபோயிடுச்சா?”
“அது அதிர்ச்சியில இருந்து மீண்டு வர்றதுக்கு கொஞ்ச நேரம் பிடிச்சது. அப்புறமா அது ஓடி போய்டுச்சு”
“சரி… எவ்ளோ ஆச்சு… எவ்ளோ பணம் நான் தரனும்?”
“என்னது பணமா? அட போங்கண்ணா… இதுக்கு நான் உங்க கிட்ட பணம் கேட்டா நான் மனுஷனே இல்லே….” என்று சொல்லிவிட்டு ஃபோனை துண்டித்தார்.
நான் இந்த சம்பவத்தை சொன்னதுக்கு காரணம் மற்றவர்களுக்கு உதவக்கூடிய நம் செயல் நமக்கு நீடித்த ஒரு சந்தோஷத்தை தரும் என்று இவர் சொன்னதற்கு நேரடி உதாரணமாகவே இந்த சம்பவம் அமைந்ததால் தான். ஒருவேளை நான் இதை இவர் கிட்டே சொல்லாமவிட்டிருந்த. அடுத்து இவர் சொன்ன அந்த பிரமாதமான விஷயம் நமக்கு கிடைச்சிருக்காது.
அப்படி என்ன சொன்னார் இவர்…?
அடுத்த பகுதியில் …..