''சந்தோஷம்னா என்ன? அது எங்கே இருக்கு?''
- நகரத்து மக்களிடம் கேட்டார் உபந்யாசகர்.
''என்ன சந்தேகம்? பணத்துலதான்!''- ஒருவர் பதில்.
''டாலர்ல சம்பளம் கொடுக்கிற அமெரிக்க வேலைதான் சந்தோஷம்''- இது அங்குள்ள இளைஞர்கள் சொன்ன பதில்.
''நாலு பேரு மதிக்கிற அளவுக்கு கையில கழுத்துல நகைநட்டு இருந்தாதான் சந்தோஷம்'' - பெண்மணிகள் சொன்னாங்க!
'நல்ல ஏரியால நல்ல அபார்ட்மென்ட் இருந்தா சந்தோஷம்'- இது நடுத்தர வயதுக்காரரோட கமென்ட்! உடனே, வயதான ஒரு பெண்மணி எழுந்து, ''இதெல்லாம் வாழ்க்கைக்கான பாதுகாப்புன்னு சொன்னா சரியா இருக்கும்''னாங்க!
''அப்படியா? சரி... நாளை உபந்யாசத்துக்கு வரும் போது, பேங்க்ல ஃபிக்ஸட்ல போட்டிருக்கற அஞ்சு லட்ச ரூபாயை எடுத்துகிட்டு வாங்க. உங்களுக்கு ஒரு பாடம் சொல்லித் தரேன்''னார் உபந்யாசகர்.
ஆடிப்போயிட்டாங்க அந்தம்மா! ''எனக்குப் பாடமும் வேணாம்; ஒண்ணும் வேணாம். அஞ்சு லட்ச ரூபாயை மடியில கட்டிகிட்டு, நிம்மதியா வரமுடியுமா? வழியில, பிக்பாக்கெட்காரன் லபக்குவானோ?னு பயந்து நடுங்கிகிட்டு, வீடு திரும்பறதுக்குள்ளே பிராணனே போயிரும். தவிர, கல்யாணத்துக்குப் போட்டுட்டுப் போன நகை யெல்லாம் பீரோவுலதான் இருக்கு. பேங்க் லாக்கர்லகூட திரும்பி வைக்கல இன்னும்! வீட்ல எல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க. பின்பக்க கதவை மூடினேனான்னுகூட ஞாபகமில்ல...'' என்று விவரித்த அந்தப் பெண்மணி சட்டுன்னு எழுந்தாங்க.
உடனே அந்த உபந்யாசகர், ''அப்ப... வீடு, நகை, பணம்லாம் உங்களுக்கு பாதுகாப்பு இல்ல; நீங்கதான் இதுங் களையெல்லாம் பாதுகாக்கறீங்க போல..!''ன்னு சொல்லிச் சிரிச்சார்.
அந்தம்மாவுக்கு மொள்ள புரிஞ்சா மாதிரி இருந்துச்சு. அப்ப, ''பணம், வீடு, நகையெல்லாம் வாழ்க்கைக்கு முக்கியம் இல்லியா?''ன்னு கேட்டாங்க.
''நீங்க எஜமானாவும் பணம்வேலைக் காரனாவும் இருந்தா ஒரு பிரச்னையும் இல்ல; பணம் எஜமானாவும் நீங்க வேலைக்காரனாவும் இருந்துட்டா, சந்தோஷமே கிடைக்காது!''ன்னாரு உபந்யாசகர். சத்தியமான வார்த்தைதான்!
இப்படித்தான் நண்பர் ஒருத்தருக்கு திடீர் சிந்தனை... 'பைக்ல போனா மரியாதை இல்ல, கார்ல போறதுதான் கௌரவம்'னு நினைச்சு, அஞ்சு லட்ச ரூபாய்க்கு காரை வாங்கி, அதுல ஆபீசுக்குப் போனாரு. சுமாராத்தான் கார் ஓட்டத் தெரியும்! தினமும் கார்ல ஆபீஸ் போய் திரும்பறதுக்குள்ள மனுஷனுக்கு எவ்ளோ அட்டாக் வரும்னே தெரியாது.
'சைக்கிள்காரன் கார்ல கோடு போட்ருவானோ', 'ஆட்டோக்காரன் காரை சொட்டையாக்கிருவானோ'ன்னு பயந்து பயந்துதான் கார் ஓட்டுவாரு.
ஒருநாள், மீன்பாடி வண்டி ஒண்ணு காரை இடிச்சதுல கார் கதவு பெயின்ட் கொஞ்சமா போயிருச்சு. ஏதோ... வீட்ல பெருந் துக்கம் வந்தது போல, நொந்து போனார். இத்தனைக்கும் வீட்ல காரை நிறுத்த இடமில்லாம, தெருவுலதான் நிறுத்தறாரு. ராத்திரில எதுனா நாய் குலைச்சாலே, 'நம்ம காரைத் திருட எவனோ வந்துருக்கான்'னு ஓடி வந்து பார்ப்பாரு. ராத்திரித் தூக்கம் போனது தான் மிச்சம்! அவருக்கு சந்தோஷம் தந்த காரே இப்போ துக்கமா மாறிடுச்சு.
அந்தப் பெண்மணிகிட்ட உபந்யாசகர் சொன்ன அறிவுரைய திரும்பவும் படிச்சுப் பாருங்க... 'பணமோ, காரோ, நகையோ, அதை நாம வைச்சிருக்கலாம். அதுங்க நம்மள வைச்சிருக்கலாமா?'