courtesy: Sri.GS.Dattatreyan
அந்தத் தென்னை மரத்தில் ஒரு பருந்து ஆழ்ந்த சிந்தனையோடு அமர்ந்திருக்கிறது. அது மிகப் பெரிய உண்மையை தன் அனுபவத்தின் மூலம் பெற்று விட்டது. அப்படி என்ன மிகப் பெரிய உண்மையை உணர்ந்தது ? என்தான் நடந்திருக்கும் ? சொல்கிறேன்.
அதோ தெரிகின்ற அந்த குளத்தின் கரையில் மீனவர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டாருந்தார். இதை வானத்தில் இருந்து பார்த்த பருந்து, அந்த மனிதன் அசந்த நேரத்தில், ஒரு பெரிய மீனைக் கொத்தியபடி வானத்தில் விர்ரென்றுப் பறந்தது. அதற்கு ஒரே சந்தோஷம். தனக்கு ஒரு பெரிய மீன் கிடைத்தது என்று. ஆனால், பாவம் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அது மீனைக் கவ்விக் கொண்டு பறப்பதைக் கண்ட காகங்கள் பருந்தை விடாமல் நாலாபக்கமிருந்தும் துரத்தின. அதுவும் பிடி கொடுக்காமல் மேலும், கீழும், முன்னும், பின்னுமாக லாவகமாகப் பறந்து சென்றது. காகங்களோ விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் கொத்த வேறு ஆரம்பித்தன. பருந்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதன் அலகில் மீனைக் கவ்வியிருந்தது. பருந்துக்கும் கோபம் வந்தது. அதுவும் கோபத்தில் ஒரு காகத்தைக் கொத்த முனைந்தது. அவ்வளவுதான் கவ்வியிருந்த மீன் கீழே விழுந்தது. அதை ஒரு காகம் லாவகமாகப் பிடித்தபடி பறக்க ஆரம்பித்தது. இப்போது மற்ற காகங்களும் பருந்தை விட்டு அந்த காகத்தின் பின்னால் துரத்த ஆரம்பித்தன.
சோர்வடைந்த பருந்தும் வந்து இந்தத் தென்னை மரத்தின் கிளையில் அமர்ந்தது. இப்போது அது என்ன நினைக்கிறது தெரியுமா ? நாம் இந்த மீன் மீது ஆசைப்பட்டதினால் அல்லவா நமக்கு இந்தத் துன்பம் வந்தது. நல்ல வேளை மீனைக் கீழே போட்டதும் தொந்தரவுகள் நீங்கின என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நம் நிலையும் இதுதான். பணம், பதவி, நிலம், பெண், பொன் என்று நம் ஆசைகளுக்கு ஓர் அளவே இல்லை. அவைகளை அடைந்தாலும் ஏற்படும் துன்பங்களுக்கும் குறைவில்லை. மீனை விட்ட பருந்து போல யாரொருவர் தன் ஆசைகளை விட்டு விடுகிறாரோ அவரே நிலையான ஆனந்தத்தை அடைய முடியும். இப்படி நம்மால் மறுக்கப்படும் ஒவ்வொரு ஆசையும் நமக்கு மன உறுதியைத் தருகிறது. மன உறுதிதான் வலிமையான ஆன்மிக சக்தியாகும். மன உறுதிப் பெருகப் பெருக ஞாபக சக்தி, கிரகிக்கும் அறிவு, பகுத்தறியும் ஆற்றல், பிரித்தறியும் ஆற்றல், யூகம், தெளிந்த சிந்தனை போன்ற எண்ணற்ற மன ஆற்றல்கள் வளர்கின்றன. இத்தகைய மன ஆற்றல்களுக்கெல்லாம் அரசன் மன உறுதிதான்.
மன உறுதி இருப்பவரால்தான் தீய எண்ணங்களை எழும் போதே அவற்றை அழிக்க முடியும். எனவே நம் வாழ்வில் துன்ங்களுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து தெளிவதே சிறப்பு. இதை வள்ளுவர்...
''பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.'' என்கிறார்.
இந்த பிறப் பென்னும் துன்பத்திற்குக் காரணம் என்ன என்று ஆராயும் போதுதான் அறியாமை நீங்கும். அறியாமை நீங்கியவன் மனமே உறுதியைப் பெறுகிறது. இதுவே ஆத்மபலம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது மன உறுதி அல்லது ஆத்மபலமற்ற மனம் புலன்களின் இழுப்புக்கு ஆட்பட்டு மயங்கி ஆசை வயப்படுகிறது. இதையே பற்று என்கிறோம். பற்றினால் பாவங்களும், துன்பங்களும் தொடர்கின்றன. மனம் பற்றறுத்தால் பிறவித் துன்பமும் அற்றுப் போகும். மனிதன் பிறக்கும் போது வினைத் தொகுதிகளின் நிமித்தம் இரண்டு விதமான இயல்புகளுடன் பிறக்கிறான். ஒன்று வித்தியா மற்றொன்று அவித்தியா எனப்படும். இதை வித்தியா குணம், அவித்தியா குணம் என்றும் சொல்வார்கள். வித்தியா குணம் மேலோங்கும் போது ஆன்ம நாட்டம் அதிகரிக்கும். எனவே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தூண்டும். அவித்தியா குணமானது உலகப் பற்றுகளில் ஆழ்த்தி வினைகளைப் பெருக்கும். பிறக்கும் போது இரண்டும் சமநிலையில் இருக்கும். வளரும் சூழலுக்குத் தக்கவாறு ஒன்று மேலோங்கவும், மற்றது தாழவும் செய்கிறது. ஒன்று வினைகளை வேரறுக்கும். மற்றது வினைகளைப் பெருக்கி, பற்றுகளை வளர்த்து துன்ப சாஹரத்தில் அழுத்தும். இதை உணர்ந்து கொண்ட நம் முன்னோர்கள் நம் வாழ்க்கை முறையை வித்தியா குணத்தை தூண்டும் விதமாக அமைத்து நடைமுறைப்படுத்தினார்கள்.
ஒருவன் வளர்ந்து வரும் போதே இறைவுணர்வை தூண்டும் விதமாகவே அவன் வாழ்க்கை முறை அமைவதால் அவன் மனவுறுதி எத்தைகய சூழலிலும் குறைவுபடாமல் விளங்கும். உலகப் பற்றுகளில் ஆழ்ந்த ஒருவன் ஈஸ்வரனை அடைவது என்பது கடும் போராட்டமாக இருக்கும். ஆனால், ஈஸ்வர பக்தியில் திளைத்த ஒருவன் உலக வாழ்க்கையில் பிரவேசிக்கும் போது அவனுடைய மனமானது சஞ்சலமடைவதே இல்லை. இதை அனுசரித்தே குருகுலம், கிரஹஸ்தம் போன்ற ஆசிரமங்கள் அமைந்திருந்தன. எனவே குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அடிப்படையிலேயே நாம் தீர்மானித்துக் கொள்வது அவர்களின் பிற்கால நல்வாழ்வுக்கு வழி வகுக்கும். என்னிடம் ஒருவர் ஒரு கேள்வியை முன் வைத்தார். பரமாத்தா வார்த்தைகளுக்கு அடங்காதவர், அவரைக் கண்டவருமில்லை, விண்டவருமில்லை என்கிறீர்கள், பிறகு எதற்காக வேலை மெனக்கெட்டு அவரைத் தேடிக் கொண்டிருக்க வேண்டும் ? என்று கேட்டார். ஐயா, நம் பிறவியின் நோக்கமே இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடப்பதுதான். அதற்காகத்தான் உண்மையை உணரும் விதமாக நமக்கு மனமும், அறிவும் அமைந்திருக்கிறது. எனவே உண்மையைத் தேடும்போது நாம் மெல்ல மெல்ல அந்த உண்மையாகவே ஆகி விடுவோம். ரமண மகரிஷி சொல்வது போல சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் போது குத்திக் கிளறப் பயன்படும் குச்சியும் எரிந்து போய் விடுவதைப் போன்றது இந்நிலை. பரமாத்மா என்பவர் கடல், நாமோ உப்புப் பொம்மை. நம்மால் ஆழத்தைக் காண முடியாமல் போய் விடலாம். ஆனால், ஆழத்தை அடைவதற்கு முன்பாகவே கடலிலே கரைந்து போய் விடுவோம் என்பதை உணருங்கள். இந்த மனிதப் படைப்பு என்பதே உப்பளம் தான். கடல் நீரை எடுத்து பாத்திகட்டி உப்பு தயாரிப்பது போன்றது. பிறகு அதை கடலில் சேர்க்கும் போது அது கடலில் கலந்து கரைந்து போய் விடும்.