Announcement

Collapse
No announcement yet.

அறியாமைக்கு இடம் கொடுத்தால்...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அறியாமைக்கு இடம் கொடுத்தால்...

    அறிவுடையோர் அகங்காரம் அடைவ தில்லை; கிணற்றுத் தவளையைப் போல் உலக விசாரங்களில் தெளிந்த அறிவு இல்லாத அறியாமை கொண்டோரையே, அகங்காரம் பற்றுகிறது; இந்த அகங்காரம், அறிவுக்கு சத்ரு என்பர் ஆன்மிக பெரியோர். இத்தகைய அறியாமையின் வசப்பட்டு, படைக்கும் கடவுளான பிரம்ம தேவன், அகங்காரத்தில் சில நிமிடங்கள் மூழ்கியதால், முருகப் பெருமானிடம் குட்டுப் பட்டக் கதை இது:
    ஒரு சமயம், நாரதர் யாகம் செய்து கொண்டிருந்தார். அப்போது மந்திரங்களை உச்சரிப்பதில் ஏற்பட்ட பிழையின் காரணமாக, யாக குண்டத்திலிருந்து, ஒரு பெரிய ஆடு வந்தது. பிரமாண்டமாக எழுந்த அந்த ஆடு, ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து, தலையை ஆட்டியதும், அதன் கொம்புகளையும், சிவப்பேறியிருந்த கண்களையும் பார்த்து, அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
    அவர்களை துரத்திக் கொண்டு ஓடிய ஆடு, அகப்பட்டவர்களை எல்லாம் கொம்புகளால் குத்தியது. இப்படி ஊரையே சின்னா பின்னாப் படுத்திய ஆடு, கடைசியில் பிரம்மதேவரிடம் போய் நின்றது. இந்நிலையில், தேவர்கள் அனைவரும், முருகப்பெருமானை வணங்கி, 'ஆறுமுக பெருமானே... நாரதர் நடத்திய யாகத்திலிருந்து வெளிப்பட்ட ஆடு ஒன்று, ஆக்ரோஷத்தோடு எங்களை கொல்ல வருகிறது; அதனிடமிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும்...' என, வேண்டினர்.
    உடனே, வீரபாகுவை அழைத்த முருகப்பெருமான், 'தம்பி... நீ போய் அந்த ஆட்டை இழுத்து வா...' என்றார். பிரம்மதேவர் சபையில் மிரட்டிக் கொண்டிருந்த ஆட்டை, கொம்பை பிடித்து இழுத்து வந்தார் வீரபாகு. தேவர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, முருகப் பெருமானை துதித்தனர். ஆடு, அறியாமையின் மொத்த உருவம் என்று ஞான நுால்கள் குறிப்பிடுகின்றன. அந்த ஆடு, அறியாமையால் சற்று நேரம் பிரம்ம தேவரின் சபையில் நின்றதன் விளைவாக, பிரம்ம தேவரும் அறியாமை வசப்பட்டு, அகங்காரத்தில் மூழ்கினார். அதன்பின், ஆறுமுகப் பெருமானால் நான்கு தலைகளிலும் குட்டு வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
    இந்த ஸ்கந்த புராண நிகழ்ச்சியை விளக்கி, பிரம்ம தேவர் அகங்கார வசப்பட்டு தண்டனை பெற்றதாக தன் நுாலில் குறிப்பிட்டுள்ளார் வியாசர். அதனால், அறியாமைக்கு இடம் கொடுத்து அகங்காரத்தால், அழிவைத் தேடிக் கொள்ளாதீர்!


    பி.என்.பரசுராமன்


    விதுர நீதி!
    எவன், வாழ்க்கையின் குறிக்கோள்களாகிய அறம்-பொருள்-இன்பத்தை அடைய, அவசரப்பட்டு செயல்படுவது இல்லையோ, எப்போதும் உண்மை பேசுகிறானோ, தன் நண்பனுக்காக கூட யாருடனும் தகராறு செய்ய விரும்புவதில்லையோ, மற்றவர்கள் மதிக்காவிடினும், கோபப்படுவது இல்லையோ, அவனே அறிவாளி.
    — என்.ஸ்ரீதரன்.
Working...
X