Announcement

Collapse
No announcement yet.

செய்த பாவம் நீங்க...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • செய்த பாவம் நீங்க...

    இரவு - பகலை போல இவ்வுலகம், நல்லவர் மற்றும் தீயவர்களால் பல்வேறு ஆக்கம், அழிவுகளை சந்தித்து வருகிறது. 'தர்ம நெறியின் வழி நடப்பவனின், சாத்வீக வாழ்க்கையின் இருப்பே, உலக இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது...' என்பர் ஆன்மிக பெரியோர். அதனால் தான், 'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை' என்று நல்லோரின் இருப்பை, மூதுரையும் சிறப்பிக்கிறது.
    இத்தகைய சிறப்புக்குரியவர் தான், யது வம்சத்தை சேர்ந்த வ்ருஷ்ணி என்பவரின் மகன் ச்வபல்கர். மனதாலும் பிற உயிருக்கு கெடுதல் நினைக்காத உத்தமர். அவருடைய சாத்வீகமான தர்ம வாழ்க்கையின் காரணமாக, ச்வபல்கர் எந்த ஊருக்கு போனாலும், அங்கு மழை பெய்யும்; பசி, பஞ்சம் இருக்காது.
    ஒரு சமயம், காசியில் மூன்று ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. இதனால், நாட்டில் பசியும், பஞ்சமும் ஏற்பட்டது.
    அரண்மனை பொக்கிஷங்களை எல்லாம் எடுத்து கொடுத்தார் காசி மன்னர். ஆனாலும், அவரால், பசி, பஞ்சத்தை தீர்க்க முடியவில்லை.
    கடைசியில் மன்னர், ச்வபல்கரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை, தன் நாட்டிற்கு வரவழைத்தார். ச்வபல்கர் காசியில் காலடி வைத்ததும், மழை கொட்டித் தீர்த்தது; பசியும், பஞ்சமும் போன இடம் தெரியவில்லை.
    ச்வபல்கர் செய்த பேருபகாரத்திற்கு பதிலாக, காசி மன்னர், தன் மகள் காந்தினீயை, ச்வபல்கருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
    காந்தினீயும் சாதாரணமானவள் அல்ல; அவள், தன் தாயின் வயிற்றில் இருந்த போது, பல ஆண்டுகள் வரை வயிற்றில் இருந்து வெளியே வராமல் இருந்தாள்.
    இதனால், காசி மன்னர் கவலையுடன், தன் மனைவியை நோக்கி, 'உன் வயிற்றில் இருப்பது சேயா, பேயா.... ஏன் பிறக்க மாட்டேன் என்கிறது?' எனக் கேட்டார். அதற்கு வயிற்றில் இருந்த பெண் குழந்தை, 'அப்பா... நான் பேயல்ல; குழந்தை தான். நான் சொல்வது போல நீங்கள் செய்வதாக வாக்குறுதி தந்தால், இப்போதே பிறப்பேன்...' என்று பதில் கூறியது.
    மன்னரும், 'சரி என்ன வாக்குறுதி வேண்டும்...' என்று கேட்டார். 'தினந்தோறும் கோ (பசு) தானம் செய்ய வேண்டும்...' என்றாள் காந்தினீ. காசி மன்னரும் அப்படியே வாக்கு கொடுத்து, அதன்படி செய்தார்.
    அப்படிப்பட்ட காந்தினீக்கு தான், மிகவும் நல்லவரான ச்வபல்கர் கணவராக வந்து வாய்த்தார். அந்த உத்தம தம்பதிக்கு பிறந்தவர் தான் கிருஷ்ண பக்தர்களிலேயே தலை சிறந்தவரான அக்ரூரர். இக்கதையில் வருபவர்களை போல நம்மால் நடக்க முடிகிறதோ இல்லையோ, 'இத்தகைய உத்தமர்களை நினைத்துக் கொண்டிருந்தாலே, நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடும்...' என்று காஞ்சி ஸ்ரீ மகாஸ்வாமிகள் சொன்னதைப் போல் உத்தமர்களை நினைப்போம்... பாவங்களை நீக்குவோம்!


    பி.என்.பரசுராமன்


    விதுர நீதி!: தீர்ந்து போன பழைய சண்டைகளை மீண்டும் நினைவூட்டி கிளப்பாதவனும், கர்வம் இல்லாமல், எப்போதும் அமைதியாக உள்ளவனும், வறுமையில் வாடினாலும், துன்பம் விளைந்தாலும், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாதவனையும், நன்னடத்தையாளன் என்று நல்லோர் புகழ்வர்.
    — என்.ஸ்ரீதரன்.
Working...
X