காகம் முட்டையிட்டது முதல் பெரிதாகி பறந்தது வரை… அபூர்வ படக்காட்சி
மூன்று மாடிகளைக் கொண்ட வீடு. இரண்டாவது மாடியில் இருந்து இரண்டடி தாழ்வாக இருந்த முருங்கை மரக் கிளையில் இரண்டு காகங்கள் வந்து உட்கார்ந்தன. நாலைந்து கிளைகள் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து கூடுகட்டத் தொடங்கின. அப்போது பல குச்சிகள் கீழே விழுந்துவிடும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த குச்சி களை தேடி சேகரித்து கூடுகட்டின. விடாமுயற்சியின் விளைவாக 10 நாட்கள் உழைப்பில் கூடு முழுமையடைந்தது. சணல், வயர், பஞ்சு துண்டுகள் என்று குச்சிகள் மீது மெத்தை அமைக்கப்பட்டு கூடு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது.
* இடையே ஒருவாரம் ஓடி மறைய காகம் பச்சை நிறத்தில் ஒரு முட்டையிட்டதை என் மனைவி பார்த்துவிட்டு ஓடி வந்து சொன்னாள். நாங்களும் அதை ரசித்தோம். அப்படியே ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 4 முட்டைகளை இட்டது பெண் காகம்.
* முட்டைகள் இட்டபிறகு பெண் காகம் கூட்டிலேயே அடைகாத்தபடி இருந்தது. ஆண்காகம் உணவு கொண்டு வரும். இரண்டும் பகிர்ந்து உண்ணும். இடையே ஒருநாள் பலத்த காற்றுடன் பேய் மழை பெய்தது. கிளைகள் இப்படியும், அப்படியுமாக ஊஞ்சலாட்டம் ஆட, எங்கே முட்டைகள் கீழே விழுந்துவிடுமோ என்று எங்கள் மனமும் ஊசலாடியது. அடை மழையில் கிளைகள் ஆடினாலும் அசைந்தாலும் அடைகாத்த காகம் மட்டும் எழுந்து பறக்காமல், பதறாமல் படுத்தே கிடந்தது.
Join Only-for-tamil
* பதினைந்து நாள் அடைகாத்திருக்கும். பச்சை வண்ண முட்டைகள் பொரிந்து கருநிற காக்கை குஞ்சுகளாக மாறின. நான்கு குஞ்சுகளும் சிவந்த அலகுடன் நலமாக இருந்தன. குஞ்சுகளிடம் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது. காக்கை முட்டையை பாதுகாத்ததுபோலவே குஞ்சுகளையும் சிறகிற்குள் வேலிபோட்டு பாதுகாத்தது.
* குஞ்சுகள் பிறந்தபிறகு தாய்காகமும், தந்தை காகமும் உணவு தேடப் பறந்தன. சில நாட்களில் குஞ்சுகளுக்கு கொஞ்சம் இறகுகள் வளர்ந்திருந்தன. தாய்காகம் இரையை கொண்டு வந்ததும் அவைகள் தங்கள் சிவந்த அலகினைத் திறந்து கத்தி உணவூட்டச் சொல் லும். தாய்க்காகமும், குஞ்சுகளின் திறந்த அலகிற்குள் தன் அலகை நுழைத்து உணவூட்டும். எந்தக் குஞ்சு அதிகம் கத்துகிறதோ அதைக் கண்டுபிடித்து தாய் காகம் உணவூட்டியது.
* சில நாட்களில் குஞ்சுகள் கண்ணைத் திறந்து தாயையும், உலகத்தையும் காணத் தொடங்கின. அவை பின்பு உணவுக்காக கத்திக் கொண்டிருக்கவில்லை. தாய் உணவுடன் வரும் நேரத்தில் மட்டும் கத்தி உணவு கேட்கும். நாளாக நாளாக காக்கை குஞ்சுகள் நன்றாக வளர்ந்துவிட்டன. இப்போது அந்த சிறிய கூட்டில் அவைகளுக்கு இடம் போதவில்லை. ஒன்றை யொன்று இடித்துக் கொண்டும், ஒன்றின்மேல் ஒன்று சாய்ந்து கொண்டும் நெருக்கியபடி இருந்தன.
* காக்கை குஞ்சுகளின் அலகு சிவப்பிலிருந்து கருப்பாக மாறின. பின்பு குஞ்சு காகங்கள் நிற்க முயல்வதும், தடுமாறி விழுவதுமாக இருந்தன. பிறகு கால்கள் பலம் பெற்று நிற்கப் பழகிவிட்டன. குஞ்சுகள் வளர்ந்துவிட்டதால் தாய் காகத்துக்கும் தந்தை காகத்துக்கும் கூட்டில் இடமில்லை. அவை பக்கத்துக் கிளைகளில் நின்றபடியே குஞ்சுகளை காவல் காத்தன.
* காக்கை குஞ்சுகள் இன்னும் சற்று பெரிதானதும் கிளைகளில் வந்து நிற்பதும், பக்கத்துக் கிளைகளுக்கு நடப்பதுமாக பயிற்சி பெற்றன. நாங்கள் காக்கைகளுக்கு காராபூந்தி உண வளித்து வந்தோம். அதனால் அவைகள் எங்களை நன்றாக அடையாளம் கண்டு கொண்டன. சில நாட்களுக்குப் பிறகு பசிக்கும் வேளைகளில் கத்திக் கத்தி காராபூந்தி கேட்கும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டன.
* நடைபழகிய குஞ்சுகளுக்கு சிறகுகள் நன்றாக வளர்ந்துவிட்டன. தாய்க்காகம் தன் அடுத்த கடமையாக குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தது. ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு பறந்து செல்வதற்கும், அங்கிருந்து எங்கள் வீட்டு பால்கனிக்கு பறப் பதற்கும் பயிற்சி அளித்தது. குஞ்சுகளும் தாய்காகத்தை பின்பற்றி பறந்து பழகின. ஒருவார கால பயிற்சியில் 4 குஞ்சுகளும் நன்றாக பறக்கப் பழகிவிட்டன. பிறகு தாய்க் காகம் இரைதேடச் செல்லும் வேளையிலும் குஞ்சு காகங்கள் பால்கனிக்கும், கிளைகளுக்கும் பறந்து பறந்து ஆனந்தப்பட்டன.
* பறக்கும் பயிற்சிக்கு அடுத்ததாக கரையும் பயிற்சியளித்தது தாய்க்காகம். அதிகாலை 5 மணியளவில் இந்தக் காட்சியை நாங்கள் கண்டோம். தாய்க்காகம் முதலில் கரைய, குஞ்சுகள் பின்னாலேயே கத்தின. ஓரிரு நாட்களில் கரையும் பயிற்சியிலும் தேறின குஞ்சு காகங்கள்.
* பறக்கவும், கரையவும் பழகிவிட்ட குஞ்சு காகங்கள், இப்போது பெரிதாகிவிட்டன. அவைகள் எங்கே சென்றாலும் காராபூந்தி உண்ணவும், இரவில் உறங்கவும் எங்கள் வீட்டு மரங்களுக்கே வந்துவிடுகின்றன.
(தன் வீட்டு முருங்கை மரத்தில் இந்த அபூர்வ காட்சிகளை ரசித்து படம் பிடித்தவர், நடிகர் ஐயப்பன் கோபி.
என்றும் அன்புடன்,
P. குண சேகரன்
Comment