உடல் உள்ள இறுக்கத்தை தளர்த்தும் ஜபயோகம்
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலால் நம் உடல் உள்ள இறுக்கமானது அதிகமாகிக் கொண்டே போகிறது. இவைகள் மேம்போக்காகவும், மென்மையானதாகவும் இருந்தால் வடுக்களையும், நோய்களையும் தோற்றுவிப்பதில்லை. ஆனால் இறுக்கங்கள் ஆழமாக இருந்தால் அதுவே (Tension) பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் மூல கூறுகளாக மாறி விடுகிறது.
அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை உணர்ச்சி பிழம்பாக அணுகுவதை விட அறிவுபூர்வமாகவும் பதட்டமும், பயமுமில்லாமல் சமநிலைப்பாட்டுடன் உறுதியுடன் செயல்பட வெற்றிக்கு வழிகாட்டவது தான் யோகா.
தியானம்
மனசலனங்களை சமன்படுத்தி, வாழ்வின் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை உற்சாகமும், மன உந்துதல்களுடன் திறம்பட செயல்களை செய்ய உதவுவது தான் தியானம். தியானம் பல்வேறு முறைகளில் பயிற்றுவித்தாலும் அதன் உட்பொருள் ஒன்று தான். அதுவே உடலும் உள்ளமும் ஒன்றுபடுத்தி உயர் ஆற்றலை நம்முள் உருவாக்குவது.
தியான நிலையில் ஒருவகை பயிற்சி தான் ஜபயோகம். உருண்டை மணிகள் 108-னை கோர்த்து வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சற்று தனித்து உயர்ந்திருக்கும். இது "மேரு" என்றழைக்கப்படும். ருத்திராட்சம், ஸ்படிகம், துளசி, செஞ்சந்தனம், தாமரை மணி, நவரத்தின மணி போன்ற பல்வேறு ஜெபமணிகள் உள்ளது.
செய்முறை
தினசரி காலை அல்லது மாலை வேளையில் சப்தம் அதிகமில்லாத இடத்தில் வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைத்து தாமரை ஆசன நிலையில் உட்காரலாம் அல்லது சுலபமாக சுகாசனத்தில் சாப்பாட்டிற்கு தரையில் உட்காருவது போல உட்கார்ந்து கொள்ளலாம்.
பிறகு வலது கையில் ஜபமாலையை பிடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு நிமிர்ந்து உட்காரவும். வலது கை பெருவிரலால் ஒவ்வொரு மணியாக உங்களை நோக்கி தள்ள வேண்டும். அப்போது உங்களது புருவ மத்தியில் உங்களது உருவத்தை நீங்கள் முழுவதுமாக அகத்தில் காண வேண்டும். 108 மணிகள் உருட்டி முடியும் வரை சலனமில்லாமலும், படபடப்பில்லாமலும் அமைதியாக இருக்க வேண்டும்.
உங்களது உருவத்தை அகத்திரையில் காண முடியாவிட்டால் உங்களுக்கு பிடித்த நன்மை தரும் உருவத்தையோ அல்லது தாயின் உருவத்தை கண்டு தியானம் செய்யலாம். இதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
நேரமில்லாமல் இருந்தால் தூங்கி எழுந்தவுடன் படுக்கையிலும், அது போல இரவு தூங்க படுக்கையில் உட்காரும்போதும் தியானம் செய்யலாம். இது பார்வைக்கும், பயிற்சிக்கும் எளியது.
ஆனால் மன இறுக்கத்தையும், உடல் இறுக்கத்தையும் போக்கும் ஆற்றல் அளப்பரியது. எனவே தினசரி மன இறுக்கங்களையும் உடல் இறுக்கங்களையும் அன்றாடம் தியானத்தால் போக்கி விடுங்கள். அதனால் மனத் தொட்டியில் குப்பைகள் சேராமல் மகிழ்ச்சி நீர்ப்பெருக்கு எடுத்து வாழ்க்கையில் வெற்றி வெள்ளம் பாய்ந்தோடும்.
Comment