அபிவாதியில்-ஸூத்ர: - முடிவு
"ஸ்ரீதரா எங்கே அபிவாதியை திரும்பவும் சொல்லு பாப்போம்" என்றார் கிட்டு மாமா.
"அபிவாதயே ஆங்கீரஸ, பார்ஹஸ்பத்ய, பாரத்வாஜ த்ரையாருஷேய ..."-ஸ்ரீதரன் சொல்லிக்கொண்டே போக
"நிறுத்து நிறுத்து" என்று அவனுக்கு ப்ரேக் போட்டுவிட்டு,
"வத: என்ற ஸம்ஸ்க்ரு சொல்லுக்கு - சொல்லுதல் என்று அர்த்தம்"
"ஆங்கீரஸ, பார்ஹஸ்பத்ய, பாரத்வாஜ - ஆகிய மூன்று ரிஷிகளின் வம்சம்தான் பாரத்வாஜ கோத்ரம் என்பது, த்ரையாருஷேய என்றால் - மூன்று ரிஷிகளை உடைய - என்று அர்த்தம்" என்றார் கிட்டு மாமா.
"எல்லா கோத்ரத்துக்கும் மூணு ரிஷிதானா மாமா"-ஸ்ரீதரன்.
"பெரும்பாலான கோத்ரங்களுக்கு மூணு ரிஷிகள், ஸ்ரீவத்ஸம் மாதிரி சில ஐந்து ரிஷி கோத்ரங்களும், சாண்டில்யம் மாதிரி சில ஏழு ரிஷி கோத்ரங்களும் இருக்கின்றன"-கிட்டு மாமா.
"ஏன் மாமா, இந்த கோத்ரங்கள்லே, இன்னின்ன கோத்ரங்கள் ஐயருக்கு, இன்னின்ன கோத்ரங்கள் ஐயங்காருக்குன்னு இருக்கா மாமா?" - ஸ்ரீதரன்.
"நன்னா கேட்டடா, அப்டியெல்லாம் ஒண்ணுமில்லை, எல்லா கோத்ரத்திலியும் ஐயரும், இருப்பா ஐயங்காரும் இருப்பா"- கிட்டு மாமா.
"அப்பறம் ஏன் மாமா, ஐயர் வேற, ஐயங்கார் வேறன்னு வைச்சுருக்கா?" - ஸ்ரீதரன்.
"டேய், வர வர ரொம்ப விவஹாரமான கேள்வியெல்லாம் கேட்கிறாய், இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்"-கிட்டு மாமா.
"மாமா, எதோ தெரிஞ்சுக்கணும்னற ஆர்வத்துல கேட்டுட்டேன், ஏதானும் தப்பா கேட்டுட்டனா மாமா" - ஸ்ரீதரன்.
"அப்டில்லாம் ஒண்ணுமில்லேடா, இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லி, ஒனக்கு அது புரியணும்னா, சில அடிப்படை விஷயங்கள் ஒனக்கு மொதல்ல சொல்லணும்" - கிட்டு மாமா.
"சரி மாமா, எனக்கும் பரிட்சைக்குப் படிக்கணும், நீங்க இந்த அபிவாதியைப் பத்தி சொல்லிட்டு இப்போதைக்கு என்ன உட்டுறுங்கோ, பரிட்சை முடிஞ்சு லீவுல ஒங்காத்துக்கு வரேன், அப்பச் சொல்றேளா"? - ஸ்ரீதரன்.
"அதான் சரி. இப்போதைக்கு, ஆதியிலே ப்ராஹ்மணன்னு ஒரு வர்ணம்தான் இருந்தது, ஆனா நெறைய கோத்ரம் இருந்தது. கோத்ரம் எதுக்குன்னா, ஒரே வம்சத்த சேர்ந்தவா, பங்காளி, அண்ணா தம்பின்ற உறவு உள்ளவான்னு தெரிஞ்சுண்டு, அவளோட, ஸஹோதர பாசத்தோட பழகவும், அவாத்து பெண்களை கூடப்பிறந்த ஸஹோதரியா நினைச்சு பழகணும்றதுக்குத்தான் கோத்ரம்.
அதுமட்டுமில்ல, நாளைக்கே நோக்கு கல்யாணம்னு வச்சுக்கோ ...." கிட்டு மாமா.
ஸ்ரீதரன் குறுக்கிட்டு, "மாமா, இப்ப நீங்கதான் விவஹாமா பேசறேள், நான் ஒண்ணும் ஒங்ககிட்ட எந்த விளக்கமும் கேட்கலை, நீங்களாத்தான் சொல்றேன் ஆரம்பிச்சு, இப்ப நீங்க என்னைக் கிண்டல் பண்றேள்".
கிட்டு மாமா குறுக்கிட்டு "இருடா, நாளைக்குன்னா நாளைக்குன்னு அர்த்தமில்லடா, ப்யூட்சர்லன்னு அர்த்தம். சரி உடு, உனக்கு கல்யாணம் வேண்டாம், உங்கண்ணாவுக்குன்னு வச்சுக்குவோம், கல்யாணத்துக்கு பொண் தேடும்போது, ஒங்க பாரத்வாஜ கோத்ரத்தை சேர்ந்த பொண்ண கல்யாணத்துக்குப் பார்க்கக் கூடாது".
"ஸ்ரீதரன் குறுக்கிட்டு, அதான் ஸஹோதரின்னு சொல்லிட்டேளே மாமா"
"சரி கெட்டிக்காரன் புரிஞ்சுண்டுட்டே, இப்ப அபிவாதியின் அடுத்த பகுதிக்கு வருவோம்.
பாரத்வாஜ கோத்ர: ன்னு சொல்லிட்டு, ஆபஸ்தம்ப ஸூத்ர: ன்னு சொன்னியோன்னோ,
அதுல „ஸூத்ர:…ன்னா என்னன்னா, ஒனக்கு வேதம்னா என்னன்னு தெரியுமா"? கிட்டு மாமா.
"மாமா நீங்களே சொல்லுங்கோ, நான் எதையானும் கேட்பேன், அப்பறம் விவஹாரம்பேள்"-ஸ்ரீதரன்.
"சரிடா, வேதம்னறது, மனுஷா யாராலையும் படைக்கப்படாத ஒரு ஆதி இலக்கியம்"-கிட்டு மாமா.
"மனுஷனால படைக்கப்படாத ஒரு இலக்கியத்தை, எந்த மனுஷன் எப்பிடிக் கண்டுபிடிச்சான்"?-ஸ்ரீதரன்.
"இங்கதாண்டா நம்ப காமன் சென்ஸ உபயோகிக்கணும்,
ஒரு குழந்தை வாய் தொறந்து பேசறத்துக்கு 2 வயசு ஆறது, அதுவரைக்கும் அந்தக் கொழந்தை என்ன நினைக்கறது, என்ன விரும்பறதுன்றது அதைப் பெத்தவளுக்குத் தெரியறது, ஏன்னா, அதத் தெரிஞ்சுக்கறதுல அவ அவளோ ஆழமா கவனம் செலுத்தறா, போராடறா, தெரிஞ்சுக்கறா. அதுமாதிரி, சாதாரணமா, நம்ப தினசரி வாழ்க்கைல ஒருத்தர் ஒரு விஷயத்தைப்பத்தி என்ன நினைக்கிறாங்கறத ஓரளவுக்கு நம்மால கெஸ் பண்ண முடியறது இல்லியா? இதெல்லாம் சின்ன விஷயம் ஒனக்குப் அடிப்படை புரியணும்ன்றதுக்காகச் சொன்னேன்.
ஒனக்குத் திருக்குறள் தெரியுமா?" - கிட்டு மாமா.
"ஏதோ கொஞ்சம் தெரியும் மாமா"- ஸ்ரீதரன்.
"திருவள்ளுவர் 1330 குறள்ல இந்த உலகத்துல உள்ள அத்தனை விஷயங்களைப் பத்தியும் ரொம்ப நன்னாச் சொல்லிருக்கார்னு, கேள்விப்பட்டிருக்கியோ"?-கிட்டு மாமா.
"ஆமாம் மாமா, கேள்விப்பட்டிருக்கேன்"--ஸ்ரீதரன்.
"அவருக்கு அவ்ளோ ஜ்ஞானம் ஏற்படறதுக்கு, தெய்வ அநுக்ரஹமும், ஒருவிஷயத்துல மிக ஆழமான ஆராய்ச்சியும், அதுவும் விஷயத்த உள்ளபடி தெரிஞ்சுக்கணும், நம்மோட விருப்பு - வெறுப்ப அதுல எள்ளளவும் நுழைக்கக்கூடாதுன்ற கண்ணியத்தோடையும் ஆராய்ச்சி பண்ணினா - அதுக்குப்பேர்தான்டா தபஸ். திருவள்ளுவரப்போல, ஆயிரம் மடங்கு ச்ரத்தையோட ஆராய்ச்சிலே, அதாவது தபஸ்ல ஈடுபட்டவா ரிஷிகள். அவாதான், பகவானோட திருவுள்ளம், பகவானோட அறிவுன்னு சொல்லப்படற வேதத்தை கண்டுபுடிச்சு, கண்டுபுடிச்சு வகைதொகை இல்லாம ஒரே குவியலா வச்சிருந்தா. பகவானோட அவதாரமான வ்யாஸ பகவான்தான், ஒரு ஸமயம் அந்த வேதங்களை நாலா பிரிச்சார். அதுதான், ரிக் வேதம், யஜூர் வேதம், ஸாம வேதம், அதர்வ வேதம்னு நாலு. ஒவ்வொரு வேதத்திலியும் பல பகுதிகள் இருக்கு. அதுல "ப்ராஹ்மணம்"ன்ற பகுதியிலதான் கர்மாக்கள் பண்ணவேண்டியதப் பத்திச் சொல்லிருக்கு.
காதால மட்டுமே, கேட்டுக் கேட்டு கர்ண பரம்பரையா வந்துண்டிருந்ததுனால, வேதத்துக்கு ச்ருதின்னு பேரு. கடினமான, இலக்கியத்தரம் வாய்ந்த, வெளிப்படையற்ற தன்மையோட வேதம் இருக்கறதுனால, அதை மநுஷாளுக்குப் புரியும்படியா, ரிஷிகள் எழுதினதுக்குச் ச்ருதின்னு பேரு. இதெல்லாந்தான் அடிப்படை சாஸ்த்ரம்ன்னு பேரு. இதுக்கப்பறம், இதை மேல மேல விளக்கறத்துக்காக எழுதப்பட்ட புராணங்களுக்கும் சாஸ்த்ரம்னு பேர்.
இந்த சாஸ்த்ரங்களை “ ... கிட்டு மாமா.
அம்மா குறுக்கிட்டு "மாமா, ஏதோ சின்னப்பையன் கேட்டான்றதுக்காக ஒரு பெரிய ப்ரசங்கமே பண்ணிண்டிருக்கேளே, தேவளுக்கு எங்கியானும் போகணுமா, நாழியாயிடப்போறது".
"அதுக்கில்லடிம்மா, அப்புறம் உம்புள்ள, வாத்யார் மாமாவ கேலி பண்றமாதிரி எனக்கும் ஒண்ணுந் தெரியாதுன்னு, எல்லாரிட்டியும் கேலி பேசுவான். ஏன், நான் கிளம்பினதும் ஏதானும் காரியம் பண்ணணுமா"? - கிட்டு மாமா.
"தப்பா எடுத்துக்காதிங்கோ மாமா, உங்களை சிரமப்படுத்திடப்போறானேன்னுதான் சொன்னேன்"-அம்மா.
"அம்மா நீன் ஒம்வேலையப் பாரும்மா-ஸ்ரீதரன்.
"சரிடா, மாமா, தேவளுக்க வேற ஏதானும் சாப்பிடக் குடுக்கவா, இல்லாட்டா சாப்ட்ற நாழியாயிடுத்து நம்பாத்லியே ஒரு வா சாட்டுட்டு போயிடுங்களேன்"?
"இல்லம்மா, நான் ஆத்துல சொல்லிட்டு வரலை, தோ ஆயிடுத்து, கிளம்பிடறேன்"-கிட்டு மாமா.
மாமா அவசரமாகத் தொடர்ந்தார் "சரிடா ஸ்ரீதரா, தர்ம சாஸ்த்ரம், வர்ணாச்ரமம், ஆஹ்நிகம், ப்ராயச்சித்தம், ச்ராத்தம் நாலு காண்டமா இருக்கு. அதுலல்லாம், என்ன கர்மா எவன் பண்ணணும், எதப் பண்ணக்கூடாது, பண்ணவேண்டியத எப்பப் பண்ணணும், பண்ணாட்டா என்ன ப்ராயச்சித்தம், பண்ணக்கூடாதத பண்ணினா என்னன்னு எழுதி வச்சிருக்கா. ஆனா, ஒவ்வொரு ப்ராஹ்மணனும் அவனோட வாழ்க்கைல உனக்கு உபநயனம் பண்ணினாளே அதுமாதிரி 40 ஸம்ஸ்காரம் அவச்யம் பண்ணனும்னு எழுதி வச்சிருக்கா. அதுல கல்யாணம் வரைக்கும் உள்ளத தவிர்க்கவே முடியாததா எழுதி வச்சிருக்கா. அப்படிப்பட்ட அந்தக் கர்மாக்களை என்னென்ன மந்த்ரங்கள் சொல்லி எப்படிப் பண்ணனும்னு ஒரு வழிகாட்டி அல்லது ப்ரொசீசர்னு சொல்வேளே அது வேணுமில்லியா? அந்த ப்ரொசீசரை சுருக்கமா சட்டுன்னு ஞாபகம் வச்சுக்கறமாதிரி சின்னச் சின்ன ச்லோகத்துல சில ரிஷிகள் எழுதி வச்சுருக்கா. அல்ஜீப்ராவுல ஏப்ளஸ் பீ ஹோல் ஸ்கொயர் மாதின்னு வச்சுக்கோயேன்.
அந்த ச்லோகங்களுகத்தான் „ஸூத்ரம்னு… பேர். பொதுவா ஸூத்ரம்ன்ற வார்த்தைக்கு பார்முலான்றதுதான் அர்த்தம்.
இந்த ஸூத்ரத்தைத்தான் ஒவ்வொரு வேதத்துக்கும் கொறைஞ்சது ரெண்டு ரெண்டு ரிஷிகள் எழுதி வச்சிருக்கா.
ருக் வேதத்திற்கு - ஆஶ;வலாயனம், கௌஷீதகம் என்று இரு ஸூத்ரங்கள்.
யஜூர் வேதத்தில் க்ருஷ்ண - சுக்ல என இரு பிரிவுககள் உள்ளன.
க்ருஷ்ண யஜூர் வேதத்திற்கு போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம்,
ஸத்யாஷாடம், வைகானஸம் என்று ஐந்து ஸூத்ரங்கள் உள்ளன.
சுக்ல யஜூர் வேதத்திற்கு - காத்யாயனம் என்று ஒரு ஸூத்ரம்.
ஸாம வேதத்திற்கு - த்ராஹ்யாயனம், ஜைமனீயம் என இரு ஸூத்ரங்கள்.
இப்ப பாரு, அபிவாதியில அடுத்தாப்ல என்ன சொல்ற, ஆபஸ்தம்ப ஸூத்ர: - யஜூர் சாகா அத்யாயின்னு சொல்றியா?
அதுனால, ஆபஸ்தம்பர் வகுத்துக்கொடுத்த ஸூத்ரப்படி கர்மாக்களைச் செய்கிறவனும்,
யஜூர் வேதத்தை அத்யயனம் செய்பவன் அல்லது அநுஷ்டிப்பவனும்
ஸ்ரீதரன் என்னும் நாமத்தை சர்மாவாக உடையவனுமான எனது பணிவான நமஸ்காரத்தை
தேவரீருக்குச் ஸமர்ப்பிக்கிறேன், தேவரீர் அருள்கூர்ந்து அடியேனை ஆசீர்வதிக்க வேண்டும் - இதுதான் அபிவாதியோட அர்த்தம்.
புரிஞ்சாப் பாரு,
புரியாட்டா, மேல சந்தேஹம் இருந்தா - வாசு வாத்யார்னு ஒருத்தர் பொழுது போகாம ப்ராமின்ஸ்நெட்.காம் னு ஒரு வெப்சைட்ல இதுமாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்றத பொழப்பா வெச்சிண்டிருக்காராம்,
ஒனக்குதான் கம்ப்யூட்டர், இன்டெர்நெட் எல்லாம் தண்ணிபட்ட பாடாச்சே,
போய்ப் பாத்துக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ.
இன்னும் கொஞ்ச நாழியாச்சுன்னா, எனக்கு ரெண்டு பக்கத்துலேருந்தும் வசவு வரும்,
சரி கேமளா நான் போயிட்டு வரேன்,
கொழந்தைய ஒண்ணும் சொல்லாதே,
விஷயம் தெரிஞ்சவா யாரும், இந்த மாதிரி கேள்விகள, தொந்தரவா நெனைக்க மாட்டா,
நம்பள யாரும் கேக்கமாட்டாளா, நமக்குத் தெரிஞ்சத நாலு பேருக்குச் சொல்ல மாட்டமான்னுதான் அவா எதிர்பார்க்கறா"- கிட்டு மாமா.
"ரொம்ப சந்தோஷம் மாமா, மாமியைக் கேட்டதாச் சொல்லுங்கோ"-அம்மா.
"மாமா, நீங்க சொன்னது எனக்கு ரொம்ப நன்னாவே புரிஞ்சிருக்கு, ஆனா வேற பல சந்தேஹங்கள் வந்திருக்கு, நான் வாசு வாத்யாரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன் மாமா, ரொம்ப தேங்க்ஸ் மாமா"- ஸ்ரீதரன்.
கிட்டு மாமா ஆத்தை விட்டு வெளியேறிச் சென்றார், ஏதோ வேலுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி வந்து உபந்யாஸம் பண்ணிட்டு போனமாதிரி உணர்ந்தனர் அம்மாவும், பிள்ளையும்.
Comment